கடந்த காலப் போராட்ட வெற்றி தோல்விகளை அலசி எமது எதிர்கால வாழ்வினை சூனியமாக்க வேண்டாம். ஆசிரியர்கள் கல்லூரியை விட்டு வெளியேறினாலும் சகல வழிகளிலும் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பி கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.
யாழ். வட்டு இந்துக் கல்லூரி உயர்தர மாணவர் மன்றம் ஏற்பாட்டில் ‘நட்பு நாடலும் நண்பகல் விருந்தும்’ என்ற நிகழ்வில் கல்லூரி வள்ளியம்மை மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்றது. இதில் குகேந்திரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அநேகமானோர் அண்மையில் வெளிவந்த பள்ளிக்கூடம் என்ற திரைப்படத்தினை பார்த்திருப்பீர்கள். அப்படத்தில் பாடசாலையை விட்டு வெளியேறிய பழைய மாணவர்கள் பாடசாலையின் வளர்ச்சிக்காகவும், எதிர்கால மாணவ வளர்ச்சிக்கும் எப்படி உதவினார்களென்று அறிவீர்கள்.
அவ்வாறே நீங்களும் இக்கல்லூரியை விட்டு வெளியேறினாலும் சகல வழிகளிலும் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். கடந்த காலப் போராட்ட வெற்றி தோல்விகளை அலசி எமது எதிர்கால வாழ்வினை சூனியமாக்க வேண்டாம்.
இக்கல்லூரியின் அபிவிருத்திப் பணிக்கு உதவ பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா முன்வந்திருக்கின்றார் என்பதனையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என அவர் மேலும் தெரிவித்தார்.