போரின் பாதிப்புக்கள் தொடர்பில் தகவல் திரட்ட தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் மற்றும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் பற்றிய விபரங்களை திரட்டுவதற்காக செயலணி குழுக்களை நியமிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 30 ஆண்டுகால போரில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான சரியான விபரங்கள் எதுவும் மதிப்பிடப்படவில்லை என்றும் அரசாங்கம் மேற்கொண்ட புள்ளிவிபரங்கள் உண்மையானவை அல்ல என்றும் பேரவை உறுப்பினர் ஒருவர் கூறினார்.

இதன் காரணமாக செயலணிக் குழுக்களை நியமித்து பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய புள்ளி விபரங்களை சேகரிப்பதற்கு தமிழ் மக்கள் பேரவை தீர்மானித்துள்ளது. குறிப்பாக மீள்குடியேறிய குடும்பங்களின் விபரங்கள் அவ்வாறு குடியேறியவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் இல்லாமை குறித்த விபரங்களை பெறுதல்,

இதுவரை மீள்குடியேறாத குடும்பங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய உதவிகள் பற்றிய விடயங்கள், படையினரால் பறிக்கப்பட்ட காணிகள், காணி உறுதி இல்லாதவர்கள் தொடர்பான விபரங்கள், போரில் உயிரிழந்த, காயமடைந்தவர்கள் தொடர்பான விடயங்கள், அழிக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த வீடுகள் தொடர்பான விபரங்கள் குறித்து செயலணிக்குழு தகவல்களை சேகரிக்கும் என்று அந்த உறுப்பினர் கூறினார்.

ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் அந்த குழுக்கள் பெற்றுக்கொள்ளும் விபரங்கள் அரசாங்கத்திடமும், சர்வதேச அமைப்புகளிடமும் கையளிக்கப்பட்டு நிவாரணங்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கூறிய அவர், கல்வி வாய்ப்பை இழந்தவர்கள் மற்றும் கல்வித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான புள்ளி விபரங்களை சேகரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாவட்டம் மாவட்டமாக அமைக்கப்படும் செயலணிக் குழுக்களில் மத தலைவர்களும் உள்ளடங்குவார்கள் என்றும் அரச அதிகாரிகள், கிராம சேவகர்களின் உதவிகள் பெறப்படும் எனவும் பேரவை உறுப்பினர் மேலும் கூறினார்.

Related Posts