வடமாகாணத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்கள் தமக்குரிய விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 10ஆம் திகதி அந்தந்த பிரதேசங்களிலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் என வடமாகாண மீன்பிடி போக்குவரத்து மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பா.டெனீஸ்வரன் திங்கட்கிழமை (02) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த மூன்று தரப்பினருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் கூடிய கவனம் செலுத்தவுள்ளோம். இவர்களுக்குரிய பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு இவர்களின் விபரங்கள் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.
3 பிரிவுகளில் விண்ணப்படிவங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. அந்தந்த பிரிவினர் தமக்குரிய விண்ணப்பப் படிவங்களை பெற்று 2 கிழமைக்குள் பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுக்க வேண்டியுள்ளதால் காலதாமதமின்றி செயற்பட ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக புலனாய்வுத் துறையினர் இவர்களுக்கு எந்தவிதமான விசாரணைகளையும் தொந்தரவுகளையும் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்’ என்றார்.