பெரும் போர் அழிவுகளில் சிக்கி வசதிகளற்று வாழ்க்கையை நகர்த்தும் எங்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படாது திருப்பப்பட்டமைக்கான காரணங்கள் என்ன?.
எமக்கு வீட்டுத் திட்டங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு கோரி முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மக்கள் நேற்று கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தினர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 வரையான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தை நடத்தினர்.
“எங்களுக்கென வந்த 107 வீட்டுத்திட்டங்கள் எமக்கு கிடைக்காது திருப்பப்பட்டுள்ளன. அவை எதற்காக திருப்பப்பட்டன?. எமக்கு உடனடியாக வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும்.” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர்.
“போரால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமத்தில் நாம் பெரும் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்கின்றோம். எங்களுக்குத் தற்காலிக வீட்டுத் திட்டம் கூட வழங்கப்படவில்லை.
வெறும் தறப்பாள் வீடுகளில் வசிக்கின்றோம். மழை வெள்ளம் அதற்குள் புகும். எமது பிள்ளைகள் தினமும் வெள்ளத்தில் மிதக்கின்றனர். வெள்ளத்துடன் பாம்புகள், விசஜந்துகள் குடிசைக்குள் வருகின்றன.
பெரும் துன்பத்தின் மத்தியில் வாழ்க்கையை நகர்த்தும் எங்களுக்கு தயவு செய்து வீட்டுத் திட்டத்தை ஒதுக்குங்கள்.” என்று அவர்கள் கோரினர்.
இந்தப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கை மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்து. ரவிகரன், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முல்லைத்தீவு அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் கையளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட பின்னர் கருத்துத் தெரிவித்த அரச அதிபர், நான் இப்போதுதான் இங்கு புதிதாகப் பதவியேற்றுள்ளேன்.
முள்ளிவாய்க்கால் மக்களுக்கான வீட்டுத் திடடங்கள் ஏன் கிடைக்கவில்லை என்பது தொடர்பில் ஆராய சிறிது கால அவகாசம் தேவைப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த அனைத்து மக்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்குவதற்கான சாதியப்பாடுகள் அதிகம் உள்ளன.
இந்திய வீடமைப்பு திட்டம் இல்லாது போனாலும் தற்போது புதிய வீடமைப்பு திட்டம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எனவே மீள் குடியமர்ந்த அனைவருக்குமே அந்த வாய்ப்பு உள்ளது. வீடு கிடைக்காத இடத்து திரும்பி கேட்டுகொண்டு இருக்கமுடியாது.
புதிதாக ஒரு விடயம் வரும் போது அதற்கு முயற்சிக்கலாம். முள்ளிவாய்க்கால் மக்களுடைய சமூக கட்டுமானங்கள் தொடர்பாக நிதி நிறுவனங்களிடம் பேசுகின்றேன். என்று தெரிவித்தார்.