போராட வேண்டிய இடம் இங்கில்லை வடக்கு முதலமைச்சர் பட்டதாரிகளுக்குத் தெரிவிப்பு

பட்டதாரிகள் தமது வேலைவாய்ப்புக் கோரி, தலைமை அமைச்சர் அலுவலகத்தின் முன்போ, அரச தலைவர் அலுவலகத்தின் முன்போதான் போராட வேண்டும். வெறும் சிபார்சு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் வேலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது. இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை முன்பாக பட்டதாரிகள் முன்னெடுத்த போராட்டம் தொடர்பில் அவர் விடுத்துள்ள சிறப்பு அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்தமை முழுமையாக வருமாறு,

இன்று காலை9.30 மணியளவில் வடமாகாணசபைக் கூட்டத்திற்கு நான் சென்ற போது வேலையற்ற பட்டதாரிகள் எனக் கூறப்பட்ட பல இளைஞர் யுவதிகள் எமது வடமாகாண சபை மற்றும் முதலமைச்சரின் அமைச்சுக் காரியாலயங்களின் முன் வாயிற் கதவுகளை அடைத்து பெருவாரியாக நின்று கொண்டிருந்தார்கள். வடமாகாணசபையின் பக்கமாக செல்லும் பாதையிலும் வாயிற் கதவடைத்து கூட்டம் நின்றது. நான் வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்றுஅவர்கள் குறைகளைக் கேட்டறிந்தேன். ஏற்கனவே அவர்களுடன் நான் பேசியவிடயங்கள் தான் அவை. வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவேண்டும் என்று கேட்டார்கள்.

அண்மையில் முதலமைச்சர் மகாநாட்டின் போது ஜனாதிபதி வடகிழக்கு மாகாண முதலமைச்சர்களுக்குக் கொள்கை ரீதியாக அளித்த வாக்குறுதியை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்.

ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தில்நாலாயிரத்திற்கும் மேலான பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்து விட்டார் எமக்குக் கிடைக்கவில்லை என்ற ரீதியில் குறைபட்டுக் கொண்டார்கள். அவர்களின் புரியாமையை அவர்களுக்கு எடுத்து விளக்கினேன். ஜனாதிபதி வடகிழக்கு மாகாணங்கள் இரண்டுஞ் சம்பந்தமாகவே அவ்வாறான வாக்குறுதியை வழங்கினார் என்பதை எடுத்துக்காட்டினேன்.பத்திரிகைச் செய்திகளோ ஒரு மாகாணத்திற்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் மற்றைய மாகாணத்தை புறக்கணித்துள்ளதாகவும் அமைந்திருந்ததைச் சுட்டிக்காட்டினேன்.அன்றையதினம் (06.05.2017)முதலமைச்சர்கள் எல்லோர் முன்னிலையிலும் ஜனாதிபதி வடகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் விரைவில் வேலை வாய்ப்பைக்கொடுப்பதாகக் கூறியதைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் வடமாகாணசபை அவைத்தலைவர் தமக்கு மூன்றுமாதங்களுக்கு முன்னர் அதே இடத்தில் வைத்து வாக்குறுதி அளித்ததை நினைவுபடுத்தி ஏன் இதுவரை அந்த வாக்குறுதி செயற்படுத்தப்படவில்லை என்று கேட்டார்கள்.

அதற்குநான் மாகாணசபையுடன் தொடர்புடைய யார் என்ன சொன்னாலும் தீர்மானம் எடுக்க வேண்டியது மத்திய அரசே என்று கூறி அதனால்த்தான் நாங்கள் இப்பொழுது மத்திய அரசுடன் பேசிவருகின்றோம் என்பதைத்தெளிவுபடுத்தினேன்.

எமது மாகாணசபையில் மொத்தமாக பட்டதாரிகளுக்கு 1171 வெற்றிடங்கள் இருப்பதையும் இங்குள்ள மத்திய அரசின்மாகாணதிணைக்களங்களில் 329வெற்றிடங்கள் இருப்பதையும் மொத்தம் 1500 பேர்களுக்கு உடனேயே வேலைவாய்ப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதை அவர்களுக்கு விளக்கினேன். மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு அவர்களை இணைப்பது பற்றியும் பேசப்பட்டது என்று அறிவித்தேன்.

அத்துடன் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் வெற்றிடங்கள் பல இருப்பதை ஜனாதிபதிக்கு எடுத்துக் காட்டியபோது அந்த வெற்றிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கைகள் எடுப்பதாகக் துமிந்ததிசாநாயக்க விவசாய அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

இவற்றை எல்லாம் இளைஞர் யுவதிகளுக்கு எடுத்துச் சொல்லியும் தமக்கு வேலைகள் கிடைப்பது சம்பந்தமாக எமது உத்தரவாதங்களைப் பெறவே அவர்கள் முயன்றனர். உத்தரவாதங்களை நாம் தரமுடியாதென்றும் மத்திய அரசாங்கமே அவற்றைத் தரமுடியும் என்ற போது சில இளைஞர்கள் யுவதிகள் அதட்டலாக எம்மை அவ்வாறான உத்தரவாதத்தைத்தருமாறும் இல்லையேல் அவ்விடத்தில் இருந்து அசையமாட்டோம் என்றும் கூறினார்கள்.

‘என்னால் கூறக் கூடியதைநான் கூறிவிட்டேன். மிகுதியை ஜனாதிபதியுடன் அடுத்தவாரம் பேசியபின் கூற முடியும்’என்று கூறிவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்கையில் வாயிற் கதவுகளுக்கு அவர்களே சங்கிலிபோட்டு பூட்டும் இட்டுத் திறப்பை அவர்கள் வைத்திருக்கின்றார்கள் என்று தெரியவந்தது. திறக்குமாறு கேட்டபோது எவரும் முன்வரவில்லை. எனது பாதுகாப்புப் பொலிசார் பூட்டைஉடைத்து உள்ளே செல்ல நடவடிக்கை எடுக்கலாமா என்று கேட்டார்கள். அத்துடன் ஒருபொது அலுவலரை தனது கடமைக்குச் செல்லாமல் தடுப்பது குற்றம் என்றும் அது சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்க பொலிஸ் டிஐஜி க்குத் தொலைபேசியில் தொடர்புகொள்ளவா என்றும் கேட்டார்கள்.

நான் அவர்களைக் கட்டுப்படுத்தி வேலையற்றபட்டதாரிகள் சுமார் இரண்டு மாதகாலமாக வேலை வேண்டும் என்று போராடிவரும் அவர்களின் விடாமுயற்சிக்கும் அவர்களின் உண்மையான பிரச்சனைக்கும் மதிப்பளித்து அங்கிருந்து அகன்று விட்டேன்.

ஆனால் அவர்களின் போராட்டம் கொழும்பில் ஜனாதிபதி காரியாலயத்தின் முன்னரோ பிரதமர் அலுவலகத்தின் முன்னரோதான் நடைபெறவேண்டும். வெறும் சிபார்சு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் வேலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது. வேலைபெற்றவர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் போகும் மத்தியஅரசாங்கமே அதைச் செய்யவேண்டும். அண்மையில் முதலமைச்சர்கள் மாநாட்டின் போது எம் பலதரப்பட்ட மக்கள் செய்துவரும் தொடர் போராட்டங்கள் பற்றிபிற மாகாணமுதலமைச்சர்கள் முற்றிலும் அறியாமல் இருந்தமை எந்தளவுக்கு நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை உணர வைத்தது. விரைவில் இளைஞர் யுவதிகளின் பிரச்சனைகள் தீர இறைவன் வழி வகுப்பானாக!

Related Posts