போராட்டம் நிறைவுக்கு வந்தது: முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு துணைவேந்தருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து துணைவேந்தர், முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்து மாணவர்களின் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்தார்.

அதன்பின்னர் மாணவர்களுடன் இணைந்து, முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல்லை துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா நாட்டி வைத்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8ஆம் திகதி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் தற்போதைய கொரோனா அச்ச நிலை காரணமாக கைவிடப்படுவதாகவும் சில மாணவர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்தல் விடுத்திருந்தது.

எனினும் மாணவர்கள், தீர்வு கிடைக்கும் வகையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று அதிகாலை வரை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts