போராட்டத்தைக் கெடுத்ததே லாரன்ஸ் உள்ளிட்ட நடிகர்கள்தான்! : மாணவர்கள்

சினிமாக்காரர்களை இனி எந்தப் போராட்டத்திலும் அனுமதிக்கக் கூடாது எனும் அளவுக்கு கோபத்தில் இருக்கிறார்கள் மாணவர்கள். அதில் நூறு சதவீதம் உண்மை இருக்கிறது என்கிறார்கள் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவளித்த திரைத்துறையினர்.

இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் எந்த நடிகர் நடிகைகளை நம்பியோ எதிர்ப்பார்த்தோ நடந்ததல்ல.

வெறும் 17 மாணவர்களுடன் ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் குவிந்தனர் மாணவர்கள் மற்றும் பொது மக்கள். குடும்பம் குடும்பமாக இந்த போராட்டத்தில் மக்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தின் இடையில் திடீரென உள்ளே நுழைந்தனர் சில நடிகர்கள். அவர்கள் ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஆர்ஜே பாலாஜி ஆகியோர். இந்த மூவரும் முதலில் மாணவர்களோடு மாணவர்களாக அமர்ந்தனர். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசினர். போகப் போக மாணவர்களின் தலைவர்களாக காட்டிக் கொண்டனர். கடைசியில் இவர்கள் சொன்னால் அத்தனை மாணவர்களும் கேட்பார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி, போராட்டத்தை முடித்து வைக்கப் பார்த்தார்கள்.

இவர்களின் இந்த செய்கைதான் கடைசி நேரத்தில் போராட்டத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதாக மெரீனா மாணவர்கள் சொல்கிறார்கள்.

“குறிப்பாக ராகவா லாரன்ஸ், ஆதி ஆகிய இருவரும் போராட்டத்துக்கே தாங்கள்தான் காரணம் என்றும், மாணவர்களுக்கு தாங்களே செலவழித்ததாகவும் சொல்லிக் கொண்டார்கள். அதனால் அந்தப் போராட்டத்தை தங்களுடையதாக சொந்தம் கொண்டாடப் பார்த்தார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. இந்தப் போராட்டத்துக்கு ஒரு லட்ச ரூபாயைக் கூட லாரன்ஸ் செலவழிக்கவில்லை. ஆனால் போராட்டத்தை முடித்து வைக்க தன்னிச்சையாக பிரஸ் மீட் வைத்தார்… இவர் ஏற்படுத்திய குழப்பம்தான் கடைசியில் போராட்டத்தைக் கெடுத்தது”, என்கிறார் பங்கெடுத்த மாணவர் ஒருவர்.

இதே குற்றச்சாட்டுகளைத்தான் கவிஞர் யுகபாரதியும் முன்வைத்துள்ளார்.
இந்தப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே எந்த விளம்பரமும் இல்லாமல் பங்கெடுத்த நடிகர் அருள்தாஸ் கூறுகையில், “எந்த வித போராட்டத்தையும் கண்டிராத எந்தவித போராட்ட அனுபவமும் இல்லாத எந்தவித நுட்பமான அரசியலும் அறியாத ஹிப்பாப் ஆதி, லாரன்ஸ், சவுந்திரராஜா, பாலாஜி போன்ற சில திரைத்துறை பிரபலங்கள் தங்களை முன்னிறுத்தி அமைதியாக உண்மையான உணர்வோடு போராடிய மற்ற பல திரைத்துறை நண்பர்களின் உணர்வுகளையும் கேலிக்கூத்தாக்கி விட்டார்கள்,” என்கிறார்.

Related Posts