போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் எதுவும் கூறவில்லை

“மக்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில், அரசாங்கத்தால் இதுவரை எவ்விதத் தகவல்கள், அறிவுறுத்தல்களும் மாவட்டச் செயலகத்துக்குக் கிடைக்கவில்லை” என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், தெரிவித்தார்.

கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதேபோன்று புதுக்குடியிருப்பில் இராணுவத்தினால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

எனினும், இம்மக்களின் நில விடுவிப்பு தொடர்பில் சாகதகமான பதில்கள் இதுவரை அரசாங்கத்தால் தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

“குறித்த போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தால் இதுவரை எவ்விதத் தகவல்கள், அறிவுறுத்தல்களும் மாவட்டச் செயலகத்துக்குக் கிடைக்கவில்லை. குறித்த மக்களைச் சந்தித்து கால அவகாசம் கோரியிருந்தேன். அதற்கு அவர்களும் சம்மதிக்கவில்லை.

இப்பிரச்சினை தேசியப் பாதுகாப்புத் தொடர்பானது என்பதால் அரசாங்கத்தின் அறிவுறுத்தல் இன்றி என்னால் எதுவும் செய்ய முடியாது” என்றார்.

Related Posts