போராட்டங்களுக்கு அஞ்சி காணிகளை விடுவிக்க முடியாது

வடக்கிலுள்ள ராணுவத்தை வெளியேற்றும் நோக்குடன் அரசியல் பின்புலத்துடன் நடத்தப்படும் போராட்டமே கேப்பாப்பிலவு போராட்டம் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியராரச்சி, குறித்த போராட்டங்களுக்கு அஞ்சி காணிகளை விடுவிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

ராணுவம் மற்றும் விமானப்படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன் 9 தினங்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கேப்பாப்பிலவில் ஏற்கனவே பல காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலர், ராணுவத்தின் தேவைக்கான காணி மாத்திரமே தற்போது உள்ளதென மேலும் தெரிவித்தார்.

எனினும், கேப்பாப்பிலவு காணிகள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் விடுவிக்கக்கூடிய காணிகளை மாத்திரமே விடுவிக்க முடியுமென்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் தேசிய பாதுகாப்பு கருதி வடக்கிலிருந்து ஒருபோதும் ராணுவத்தை அகற்ற மாட்டோம் என தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலர், வடக்கிலிருந்து ராணுவத்தை அகற்றினால் தெற்கிலுள்ளவர்களும் அவ்வாறு கேட்பார்கள் என்றும் அவ்வாறாயின் அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Related Posts