Ad Widget

போதையில் மோ.சைக்கிள் ஓடுபவர்களை மதுபானசாலை அருகில் வைத்து மடக்கிப் பிடிக்க உத்தரவு!

மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓடும் இளைஞர்களை, சாராயக் கடைகளுக்கு முன்னாலேயே மடக்கிப்பிடித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸாருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் குற்றச்செயல்கள், மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் மதுபோதையில் வாகனம் செலுத்தும் குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவில் பதிவாகியிருப்பதைச் சுட்டிக்காட்டி, மதுபோரையில் வாகனம் செலுத்தும் குற்றங்கள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நீதிபதி தமது உத்தரவில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

நீதிவான் நீதிமன்றம் ஒன்றினால் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதை ரத்துச் செய்து அதனை மீண்டும் வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான வழக்கு விசாரணையொன்றின்போதே கடந்த வாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி தனது உத்தரவில் மேலும் தெரிவித்துள்ளதாவது: –

குடித்துவிட்டு வெளியில் வந்து மோட்டார் சைக்கிள்களில் மது போதையில் வாகனத்தைச் செலுத்தும் அனைவரையும் சாராயக் கடைப் பகுதிகளில் கண்காணித்து மடக்கிப் பிடித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டும் இளைஞர்களை, அவர்கள் தமது பயணத்தைத் தொடரவிடாமல் மறித்து, பொலிஸ் நிலையம் கொண்டு விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். குடிபோதையில் இருக்கின்றார்கள் என்று தெரிந்த பின்னரும் வழக்கை பதிவு செய்துவிட்டு அவர்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அனுமதிப்பதனால் விபத்துக்கள் ஏற்படுவதற்கு பொலிஸாரே காரணமாக நேரிடுகின்றது.

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு இனிவரும் காலங்களில் 3 மாதச் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று சட்டம் பரிந்துரைத்துள்ளது. அவர்களுக்குத் தண்டப் பணம் விதிப்பதற்கும், அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடை நிறுத்துவதற்கும் சட்டம் பரிந்துரை செய்கின்றது. யாழ்.நகரப்பகுதியில் உள்ள சாராயக் கடைகளின் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் நிறுத்தப்படுகின்றன. இந்த மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து செல்பவர்கள், மது போதையிலேயே வாகனத்தைச் செலுத்துகின்றார்கள்.

எனவே, சாராயக் கடைகளில் குடித்துவிட்டு வெளியில் வருபவர்கள், மது போதையில் மோட்டார் சைக்கிள்களில் பயணிக்க எத்தனிப்பவர்களைக் கண்காணித்து, அவிடத்திலேயே அவர்களை சட்டரீதியாகக் கைது செய்ய வேண்டும்.

யாழ்.நகரப்பகுதியில் 18 க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே மாலை 6 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையில் நகர சாராயக் கடைகளில் நிரம்பி வழிகின்றார்கள். சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறைத் தண்டனை வழங்குவதன் ஊடாக மட்டுமே, மது போதையில் இளைஞர்கள் வாகனம் ஓடுவதைத் தடுக்கவும், இவர்களின் சட்டவிரோதச் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

சாராயக் கடைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு மதுவரித் திணைக்கள ஆணாயாளர் நாயகத்திற்கு, எவ்விடத்தில் கடை திறக்கலாம் என சிபாரிசு செய்கின்ற மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச நிர்வாகப் பிரிவு அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான பரிந்துரை காரணமாகவே, யாழ் நகரப் பகுதிகளில் கோவில்கள், பாடசாலைகளைவிட, எண்ணிக்கையில் மதுபான சாலைகள் நிரம்பி வழிகின்றன.

யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட கிளிநொச்சி நீதிமன்றம் மது போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு தண்டம் விதித்தும், சிறைத்தண்டனை வழங்கியும், அத்துடன் சாரதி அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தியும் தண்டனை வழங்கியதன் காரணமாகவே அங்கு மதுபோதையில் வாகனம் செலுத்துவது குறைந்துள்ளது என்று போக்குவரத்து பொலிசார் நீதிமன்றத்திற்கு அறிவிக்கும் அளவுக்கு அங்கு முன்னேற்றகரமான நிலைமை ஏற்பட்டுள்து என்பதை யாழ் போக்குவரத்து பொலிஸார் கவனத்தில் கொள்ள வேண்டும். இடைநிறுத்தப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் மீதான தடையை நீக்கி, அதனை மீண்டும் வழங்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மீள்விசாரணை வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க முடியாது என மறுத்து, விசாரணையை நீதிமன்றம் மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

Related Posts