ஹெரோயின், அபின், மோபின் போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார், மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.
ஒரு கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தார் மற்றும் விற்பனை செய்தார் என குற்றம் சுமத்தி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில், குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, இதுவரையில், அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான கைரேகை அடையாளப் பதிவு இல்லாததையும் கவனத்திற் கொண்டு, அவருக்கு 30 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தபோதே நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டபோது, அவருடைய உடைமையில் இருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம் 75 ஆயிரம் ரூபாவையும் அரசுடைமையாக்கி அதனை அரசிறைக்குச் செலுத்தும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பில் போதைப் பொருளானது, சமூகத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகள் நியதிகளைத் தகர்த்தெறிந்து, ஒரு சமூகத்தையே அழிக்க வல்லது. அதன் காரணமாகவே அத்தகைய தீய சக்தியைக் கொண்டுள்ள போதைப் பொருளை சிறிய அளவில்தானும், உடைமையில் வைத்திருப்பதும், அதனை விற்பனை செய்வதும், பாரதூரமான குற்றமாகக் கருதி அதற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் போதைவஸ்து கட்டளைச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
நீதிபதி இளஞ்செழியன் இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மிகச் சிறிய அளவாகக் கருதப்படுகின்ற 2 கிராம் ஹெரோயின் மோபின் அல்லது அபின் போன்ற ஏதாவது ஒரு போதைப் பொருளை ஒருவர் உடைமையில் வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால் அந்த நபர் மேல் நீதிமன்றம் ஒன்றில் குற்றவாளியாகக் காணப்படும் பட்சத்தில் அவருக்கு மரண தண்னை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
இரண்டு கிராம் எடைக்கும் குறைவாக மில்லி கிராம் அளவில் ஹெரோயின் மோபின் அபின் போன்ற போதைப் பொருளில் ஏதாவது ஒன்றை உடைமையில் வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால் கடூழியச் சிறைத் தண்டனையும் தண்டப்பணமும் விதிக்கப்படும்.
போதை வஸ்து கட்டளைச் சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்களுக்கு நீதிவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்படமாட்டாது. அதனால் அவர்கள் வெளியில் வரமுடியாது. விசாரணைக்காலம் முடியும் வரையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என்று சட்டம் விதந்துரைக்கின்றது.
போதை வஸ்து கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே மேல் நீதிமன்றத்தில் பிணைகோரி மனு தாக்கல் செய்ய முடியும். கஞ்சா அல்லது கனபிஸ் உடைமையில் வைத்திருந்தமை அல்லது விற்பனை செய்தமைக்கு கடுழியச் சிறைத் தண்டனை அல்லது தண்டப்பணம் விதிப்பதற்கு மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சமூகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் நோக்கத்தில், பலவீனமான சக்திகளாக கருதப்படுகின்ற மாணவர்கள் வேலையற்ற நிலையில் உள்ள இளைஞர்கள் போன்றவர்களைப் பாதுகாப்பதற்காகவே, போதை வஸ்து கட்டளைச் சட்டம் இறுக்கமான விதிகளையும் கடுமையான தண்டனைகளையும் பிரகடனப்படுத்தியிருக்கின்றது.
எனவே, போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு போதை வஸ்து கட்டளைச் சட்டத்தின்படி மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதித்து கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என நீதிபதி இளஞ்செழியன் எச்சரித்துள்ளார்.