போதைப் பாவனையால் யாழ். நகர பாடசாலை மாணவர்கள் வாழ்வு சீரழிகிறது! நீதிபதி இளஞ்செழியன்

யாழ். நகர்ப் புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது எனக் கவலை வெளியிட்டுள்ளார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.

பாடசாலை நேரத்தில் போதைப்பொருள் பாவிக்கும் மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் அத்தகையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வியாழனன்று எச்சரிக்கை செய்துள்ளது.

நூறு கிலோ கஞ்சா உடைமையில் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பான பிணை மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

யாழ் நகரில் பிரபல பாடசாலைகளில் உள்ள ஒரு சில மாணவர்களே பாடசாலை நேரத்தில் பாடசாலை வளாகத்தில் மது அருந்துதல், புகை பிடித்தல் மற்றும் போதை கலந்த இனிப்புகளை ருசித்தல் போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என மேல் நீதிமன்றத்திற்குச் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீதிபதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ்ப்பாணம் நகர்ப்புற பிரபல பாடசாலைகளில் ஒரு சிறு தொகை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கல்வி கற்கும் நேரத்தில் போதை வஸ்து பாவிப்பதாகவும், போதை கலந்த இனிப்புகளை உண்பதாகவும், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதாகவும் பாடசாலை சமூகங்களினால் மேல் நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அந்தப் பாடசாலைகளின் ஒருசில ஆசிரியர்களும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்கி வருவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் பராயத்தினராகிய சிறுதொகை மாணவர்களே இத்தகைய போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தக் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசங்கள் மது பாவனை மற்றும் சிகரட் பாவனை தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்கள் அதிபர்கள் இந்தக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அச்சமடைந்திருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுடைய பெற்றோருக்கு அதுபற்றி அறிவித்து, அவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டியது அதிபர் ஆசிரியர்களின் கடமையாகும்.

இத்தகைய மாணவர்களை பொலிசாரின் ஊடாக நேரடியாகக் கண்காணித்து, அவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

அந்தப் பாடசாலைகளின் ஏனைய மாணவர்களின் ஒழுக்கம், கல்வி, எதிர்காலம் என்பவற்றின் நலன் கருதி போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்படுகின்ற மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

போதை வஸ்து பாவனை இளம் பராயத்தினர் மத்தியில் அதுவும் மாணவர்கள் மத்தியில் அனுமதிக்கப்பட முடியாது. அவர்கள் மத்தியில் இத்தகைய குற்றச் செயல்கள் இடம்பெறுவதை சடடத்தை நேசிப்பவர்களும், சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களும் பார்த்திருக்கவும் முடியாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

Related Posts