யாழ்ப்பாணம் இப்போது போதைப்பொருட்கள் கடத்தல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா போதைப்பொருட்கள் இங்கு கடத்தி வரப்படுகின்றன. எனவே, இக் கடத்தலைத் தடுப்பதற்கு கரையோரங்களில் வாழ்கின்ற பொதுமக்களே எமக்கு கூடுதலாக உதவ வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.
யாழ். சென் பற்றிக்ஸ் வீதியில் உள்ள சென். றோக்ஸ் சனசமூக நிலையத்தில் ‘மறைந்த முன்னோடிகள் நினைவுத் தூபி’யை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர்,
இன்றைய அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் ஏனைய கட்சித் தலைவர்கள் தமது அரசியல் சிந்தனைகளை மாற்றிக் கொண்டு எம்முடன் இணைந்துகொண்டு அரசியலில் ஈடுபடக்கூடிய சூழ்நிலைகள் கூடுதலாகக் காணப்படுகின்றது. அவ்வாறான ஒரு நிலை ஏற்படுகின்ற போது ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு தமது உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடக்கூடிய நாட்கள் வெகுதொலைவில் இல்லை.
நாம் வெறுமனே பொருள் ஈட்டுவதையும் வருமானத்தையும் மட்டும் கருத்தில் கொள்ளாது ஆரோக்கியமான சமூகம் பற்றியும் சமூக மேம்பாடு பற்றியும் சிந்தித்தல் அவசியமாகின்றது. எங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம், அவர்களின் கற்றல் நடவடிக்கைகள், அவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றியெல்லாம் நாங்கள் கவனம் எடுக்க வேண்டும். உங்கள் பகுதியில் இடம்பெறக்கூடிய சட்ட விரோத செயல்கள் மற்றும் தீய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் இருந்து உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்தலும் அவர்கள் பற்றிவிழிப்பாக இருத்தலும் பெற்றோர்களாகிய உங்களின் தலையாய கடன். இவை பற்றி நீங்கள் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.
கலாசார பிறழ்வு அற்ற மிகவும் பண்பட்ட சீரிய சமூகமாக வாழ்ந்த வடபகுதி தமிழர்களின் வாழ்க்கை முறை, கலாசாரம், கல்வி என்பவற்றை திட்டமிட்டு அழிக்கக்கூடிய இவ்வாறான தீய நடவடிக்கைகளுக்கு நாம் ஒரு போதும் உடந்தையாக இருக்கக் கூடாது.எனவே, இவ்விடயம் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் வேண்டப்படுகிறது. உங்கள் பங்குத்தந்தைமார் உங்களைச் சரியாக வழி நடத்துவார்கள் என்பதில் எமக்குச் சந்தேகமில்லை. ஆனால் அவர்களின் அறிவுரைகளை மனதில் எடுக்க நீங்கள் யாவரும் முன்வர வேண்டும். என்றார்