Ad Widget

போதைப்பொருளுக்கு அடிமையாகிய மாணவனுக்கு பொலனறுவையில் ஒரு ஆண்டு மறுவாழ்வு

கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகிய 17 வயது மாணவனை பொலனறுவை கந்த காடு மறுவாழ்வு நிலையத்தில் அனுமதித்து ஒரு ஆண்டு மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார்.

“மகன் எமது சொல்லைக் கேட்பதில்லை. போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டார். வீட்டில் இருந்து பொருள்களைத் திருடிச் சென்று விற்றுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்த போதைப்பொருள்களைப் பயன்படுத்துகிறார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையிலும் சித்தியடையவில்லை. பாடசாலைக்கும் ஒழுங்காகச் செல்வதில்லை. அவரை சீர்திருத்தப் பாடசாலைக்கு அனுப்பி நல்வழிப்படுத்தவேண்டும்” என்று மாணவனின் தந்தை மன்றிடம் கேட்டுக்கொண்டார்.

தந்தையாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், மாணவனை வரும் ஒரு ஆண்டுக்கு பொலனறுவை கந்தக் காடு மறுவாழ்வு நிலையத்தில் தடுத்துவைத்து மறுவாழ்வு வழங்குமாறு உத்தரவிட்டார்.

மாணவனின் மறுவாழ்வு நிறைவடையும்வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 17 வயது மாணவன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த டிசெம்பர் இறுதியில் யாழ்ப்பாணம் நீதிமன்ற அப்போதைய நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டார்.
மாணவனை ஒரு வார காலத்துக்கு சன்றுபெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது. வழக்கு கடந்த 4ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் முன்னிலையில் வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர் மன்றில் முற்படுத்தப்பட்டார். அவரது தந்தையும் மன்றில் முன்னிலையானார்.

பொலனறுவை வெலிக்கந்தை – கந்தகாடு மறுவாழ்வு முகாமில் போதைப்பொருளுக்கு அடிமையாகிவர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்படுகிறது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் வரும் இந்த மறுவாழ்வு முகாமில் முன்னாள் போராளிகளுக்கும் மறுவாழ்வு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts