கதிர்காமத்தில் பொலிஸாரின் ஆணையைமீறி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு காரணம் பொலிஸாருக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படாமையே என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கதிர்காமத்தில் அண்மையில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த காரணத்தினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததோடு, போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
குறித்தசம்பவம் தொடர்பாக நேற்று சாகல ரத்னாயக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலமாக மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொலிஸாருக்கு முறையான தொழில்முறை பயிற்சி வழங்கப்படாத நிலையே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே கூடிய விரைவில் பொலிஸாருக்கு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் பயிற்சி செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படும் எனவும் சாகல ரத்னாயக்க தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி நடத்தப்பட்ட இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில், பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைவாக புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவினர் கதிர்காமம் சென்று விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.