போட்டோக்கு விளக்கம் கொடுக்கும் கருணாஸ்!

சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது கருணாஸின் போட்டோ. ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கின்போது ஒரு இளைஞரோடு கருணாஸ் எடுத்துக்கொண்ட செல்ஃபியை வைத்து, ‘சட்டசபையில் ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’னு பாட்டு பாடிட்டு, இறுதிச்சடங்கில் சிரிச்சுக்கிட்டே போட்டோவுக்கு போஸ் கொடுக்குறீங்களே பாஸ்..!’ என்று பலரும் சமூக வலைதளங்களில் கருணாஸை விமர்சித்துவர, அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் கருணாஸ்.

“நேற்று ராஜாஜி அரங்கில் இருந்து அண்ணா சாலை வழியாக எம்.ஜி.ஆர் சமாதிக்கு செல்லும் வழியில் கிட்டதட்ட 100 பேருக்கும் அதிகமானோர் கேவலமாக என்னிடம் வந்து செல்ஃபி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது நான் அவர்களிடம், ‘ஏம்ப்பா, படம் புடிக்கிறதுக்கான இடமா இது..? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..?’னு கேட்டேன். அப்படி நான் கேட்டும், அதையும் மீறி என்னோடு போட்டோ எடுக்கணும்னு சிலர் தொடர்ந்து வந்தாங்க. அப்படி வந்த ஒரு பையன் தான், ‘அண்ணே, நான் ஊருல இருந்து வந்துருக்கேன். ஊருக்கு போயிட்டேன்னா அப்புறம் பார்க்கமுடியாது, ஒரே ஒரு போட்டோ எடுத்துகலாம்’னு கேட்டதனால தான் அந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன். அது தெரியாம சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவிச்சிட்டு இருக்காங்க.

இறுதிச்சடங்கு நடக்கும்போது கருணாஸ் எப்படி போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம்னு கேட்கிறாங்க. இறுதிச்சடங்கிற்கு வந்திருக்கும் போது போட்டோ எடுக்கலாமாங்கிற எண்ணம் ஏன் அவங்களுக்கு வரலை. என்னையும் என் விசுவாசத்தையும் விமர்சனம் பண்றவங்களுக்காக நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நேற்று அம்மாவை நல்லடக்கம் செய்த இடத்தில் நெடுங்கட்டையா விழுந்து சாமி கூம்பிட்டுட்டு, அங்கு இருந்த மண்ணில் ஒரு கைப்பிடி எடுத்து வந்து என் வீட்டில் வைத்திருக்கிறேன். நான் உண்மையானவன், அம்மாவிற்கு எப்போதும் உண்மையானவனாக தான் இருப்பேன்.

எனக்கு எப்போதும் எதிரிகள் அதிகம். இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்தில் என்னை விமர்சித்தால் அவர்களுக்கு இன்பம் கிடைக்கிறது. இந்த விஷயத்தை பொறுத்தவரை இது தான் என் விளக்கம்” என்று முடித்தார் கருணாஸ்.

Related Posts