மோட்டார் சைக்கிளில் பயணித்த விசேட தேவையுடைய ஒருவரை, போக்குவரத்து பொலிஸார் நடைபாதையில் போட்டு புரட்டி, புரட்டி தாக்கிய சம்பவம் கஹட்டகஸ்திகிலிய நகரத்தில் இடம்பெற்றுள்ளது.
கஹட்டகஸ்திகிலிய பொலிஸின் போக்குவரத்து பொலிஸ் பிரிவு அதிகாரிகளினால் நேற்று முன்தினம் 22ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலைவேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வீடியோ சமுக மற்றும் செய்தி வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம்,
விசேட தேவையுடைய அதுவும் செயற்கை காலொன்று பொருத்தப்பட்ட ஒருவர், மோட்டார் சைக்கிளில் கஹட்டகஸ்திகிலிய நகரத்துக்கு வந்துள்ளார். கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் இருவர், மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
பொலிஸாரின் சமிக்ஞையை மீறிய அந்த மோட்டார் சைக்கிள், கஹட்டகஸ்திகிலிய பஸ் நிலைய பக்கமாக பயணித்துள்ளது.
அந்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்த பொலிஸார் இருவரும், பஸ்நிலையத்துக்கு அருகில் வைத்து மடக்கிபிடித்தனர்.
மடக்கி பிடித்தது மட்டுமன்றி கடுமையாக தாக்கியுள்ளனர். பொலிஸாரின் தாக்குதலில் அவருடைய செயற்கை காலும் கழன்றுவிட்டது. இதனால் அவர், நடைபாதையில் விழுந்துவிட்டார். அப்போதும் விடாமல் அவ்விரு பொலிஸாரும் புரட்டி, புரட்டி தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் ரண்வலஆராச்சியிடம் கேட்டபோது,
அவ்வாறான பாரதூரமான சம்பவம்தொடர்பில் தனக்கு தெரியாது. எனினும், மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபரொருவர், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்துள்ளார். அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அவரை கைதுசெய்வதற்கு முயன்றபோது, பொலிஸ் அதிகாரியின் கையை அவர், கடிக்கமுயன்றுள்ளார் என்று தனக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேநபர், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.