வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக விதிக்கப்படும் தண்டப்பணம் இந்த மாதம் 15ஆம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.
வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்துவதற்கான தண்டப்பணம் ரூபா 25 ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகுமம் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பில் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைவாக வாகன சாரதியத்துவத்தில் விடும் தவறுகள் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த வர்த்தமானி அறிவிப்பு இம்மாதம் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். இதுவரையில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு 23 வாகன தவறுகளுக்காக மேற்கொள்ளப்பட்டது. இது தற்பொழுது 33 தவறுகளை உள்ளடக்கும் வகையில் செயற்படுகின்றது.
இதற்கமைவாக இந்த தண்டப்பணம் 30 தொடக்கம் 50 சதவீதம் வரையாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்துவதற்கான தண்டப்பணம் 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
பொலிஸாரின் உத்தரவுகளுக்கு செவிமடுக்காமல் செயல்படும் சாரதிகளுக்கு தண்டப்பணம் 2 ஆரயிரம் ரூபாவாகவும், ஆலோசனை அனுமதிப்பத்திரம் அல்லாமல் ஆலோசனை பணிகளில் ஈடுபடுவதற்கான குற்றச் செயல்களுக்கு ரூபா 2 ஆயிரம் என்ற ரீதியில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடுமுழுவதிலும் உள்ள 489 பொலிஸ் நிலையங்களுக்கு புதிய தண்டனை விதிப்பு தொடர்பான குற்றச்சாட்டு அடங்கிய விபர ஆவணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வாகன போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்தார்.