பயணிகள் போக்குவரத்து அதிகார சபையை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அந்த அதிகார சபையில் 100 இற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியுமெனவும், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
“போக்குவரத்து நியதிச் சட்டம் 2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நியதிச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந் நியதிச் சட்டம் அமைச்சர் வாரியத்திற்கு தாக்கல் செய்யப்பட்டு, முதலமைச்சரினால் சட்ட நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஒன்றினை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அந்த வேலைத்திட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், 100 இற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும். அதற்கான நியதிச் சட்டமும் உருவாக்கப்பட்டு, அமைச்சர் வாரியத்தின் ஊடாக முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த நியதிச் சட்டங்களும், வடமாகாண முதலமைச்சர் சட்ட நிபுணர்களிடம் கையளித்து பார்க்க வேண்டும் என்பதற்காக அனுப்பி வைத்துள்ளார்.
வடமாகாணத்தில் போக்குவரத்து அபிவிருத்தி என்பது மிக முக்கியமாக செய்யப்பட வேண்டியுள்ளது. ஆனால், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கு இடையில் உள்ள போட்டித் தன்மை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தான் முகம் கொடுத்து வருகிவதாகவும் அமைச்சர் கூறினார்.
எனவே, 2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நியதிச்சட்டம் வெளிவருவதற்கு ஏதோ தடங்கல் இருக்கின்றது. உரியவர்கள் அந்த தடங்கலை நிவர்த்தி செய்து நியதிச்சட்டத்தினை விரைவில் கையளிக்குமாறும், அவ்வாறு நியதிச்சட்டம் கையில் கிடைத்தால், தான் அதிகமாக செயலாற்ற முடியுமென்றும் வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.