வட மாகாண போக்குவரத்துப் பொலிஸாரின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் வட மாகாண பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரிவு ரீதியாக புதிய 600 சி.சி. குதிரை வலு வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தராவினால் வழங்கப்பட்டுள்ளன.
நிகழ்வுக்கு வருகை தந்த வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரை மகாதேவா ஆச்சிரம மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் வரவேற்று மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்ற மண்டபத்திறக்கு அழைத்து வரப்பட்டார்.
கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள இராணுவ படை முகாமின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை பகல் கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
வட மாகாணத்திற்கென 23 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் வட மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.
இதேவேளை வடமாகாணத்தின் நெடுஞ்சாலைகளின் போக்குவரத்துக் கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கு வசதியாக விசேடமாக போக்குவரத்துப் பிரிவு ஒன்று வட மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலத்தில் இரவு வேளைகளில் கடமையாற்றிய போக்குவரத்துப் பொலிஸாரின் நடவடிக்கைகள் சம்பந்தமாக எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஏ9 வீதியில் மாலை 6 மணியில் இருந்து பகல் 6 மணி வரையிலான போக்குவரத்துப் பொலிஸாரின் பணிகள் தற்காலிகமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இடை நிறுத்தப்பட்டிருந்ததுடன் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிவில் உடையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் இலங்கை பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் போக்குவரத்துப் பொலிஸாருக்கு 272 புதிய வேகம் கூடிய மோட்டார் சைக்கிள்கள் கிடைத்தன. இதில் 23 மோட்டார் சைக்கிள்கள் வடபகுதிக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய போக்குவரத்து கண்காணிப்புப் பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.