போக்குவரத்து விதியை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்குவரத்து பொலிஸார் குறித்த சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே அதனை வழங்க வேண்டும். அவரது மொழி உரிமையை மீற முடியாது என, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பொலிஸார் ஒருவரால், தனக்கு புரியாத சிங்கள மொழியில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமையை ஆட்சேபித்தும், தனது மொழி உரிமை மீறப்பட்டதாகத் தெரிவித்தும் வவுனியா, மன்னார் வீதியைச் சேர்ந்த அன்று பிரசன்னோ என்ற இளைஞர், வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா காரியாலத்தில் ஜனவரி 1ஆம் திகதி செய்த முறைப்பாடு தொடர்பில், மனிதவுரிமை ஆணைக்குழுவால் விசாரணை மேற்கொண்ட பின்னர், வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தமிழ் மொழி தெரிந்த பொதுமகனுக்கு சிங்கள மொழியில் தண்டப் பணச் சீட்டையோ அல்லது சிங்கள மொழியிலான தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தையோ வழங்குவது பிழையான நடைமுறையாகும். இச்செயற்பாடு, பொதுமகன் ஒருவரின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிய மொழி உரிமையை மீறும் செயலாகும்.
“எனவே, எதிர்காலத்தில் அதிகாரிகள் போக்குவரத்துக் குற்றங்களுக்கு வழங்கும் சீட்டுகளை பொதுமக்களுக்கு விளங்கும் மொழியில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.