உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மரு மகனும், அவரது ஆட்சிக்காலம் முழுவதும், ரஷ்யாவுக்கான தூதுவராகப் பணியாற்றியவருமான உதயங்க வீரதுங்க, நைஜீரியாவில் இயங்கும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் விற்பனை செய்திருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இறுதிப்போரின்போது புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இவ்வாறு நடுக்கடலில் வைத்து விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், இது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
கேள்வி நேரத்தில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் கூறியவை வருமாறு:-
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும்நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார்.
மேற்படி விவகாரம் தொடர்பில் உக்ரேன் அரசும் எமக்குத் தகவல்களை வழங்கியுள்ளன. இவர் நைஜீரியாவில் செயற்படும் போஹோ ஹராம் தீவிரதாத அமைப்புக்கும் ஆயுதம் வழங்கியிருப்பார் என சந்தேகம் எழுகின்றது.
விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் சர்ச்சை எழுகின்றது. இவை அரசின் ஆயுதம் அல்ல என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். குறிப்பாக, இறுதிப்போரின்போது புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், தங்கங்கள் அடங்கிய முழு விவரத்தையும் முன்னாள் அரசு வெளியிடவில்லை.
எனவே, புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களா விற்பனை செய்யப்பட்டுள்ளன? நடுக்கடலில் வைத்து ஆயுதம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன – என்றார்.