நைஜிரியாவின் வட கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 40 இளம்வயது ஆண்களும், சிறார்களும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
புத்தாண்டு தினத்தன்று இவர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாக மலேரி என்ற கிராமத்தில் இருந்து மைதுகுரி நகருக்கு தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது கிராமத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில் வந்த ஆயுதமேந்திய போகோ ஹராம் அமைப்பினர், தம்முடைய உரையைக் கேட்குமாறு கிராமத்திலிருந்த ஆண்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதன்படி அவர்களின் பேச்சைக் கேட்கச் சென்ற இளம் ஆண்கள் சுற்றிவளைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
கடத்திச் செல்லப்பட்டவர்கள் அனைவரும் அருகே இருக்கும் சம்பிசா காட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் நேரில் பார்த்த கிராமத்தவர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு போகோ ஹராம் அமைப்பால் இருநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டனர். இந்த அமைப்பு தொடர்புடைய வன்செயல்களில் கடந்த ஆண்டு இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
போகோ ஹராம் அமைப்பு நாட்டுக்கு பெரிய வேதனையை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள நைஜிரியாவின் அதிபர் குட்லக் ஜொனாதன், இந்த அமைப்பு அழித்தொழிக்கப்படும் என்று தன்னுடைய புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.