பொலன்னறுவையில் சில தினங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி, நடைபாதை வளாகத்தை அரச தலைவர் மைத்திரிபால திறந்து வைத்த பின்னர் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவை 100 தடவை பயிற்சி செய்யுமாறு மைத்திரி பணித்த காணொலி சமூகவலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.
பொலன்னறுவை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உடற் பயிற்சி வளாகமொன்றை மைத்திரி திறந்துவைத்தார். இந்த நிகழ்வுக்கு உடற்பயிற்சி ஆடைகளை அணிந்தவாறே மைத்திரியும் ஏனைய அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
அந்த வளாகத்தில் பூஜித்த ஜயசுதந்தரவை மைத்திரிபால 100 தடவை பயிற்சி செய்ய வைத்தார். பூஜித்த ஜயசுந்தர எழுந்து நிற்க முற்பட்ட போது மைத்திரி அதற்கு இடமளிக்கவில்லை. ‘‘ஐ.ஜி.பி. என்றால் சாதாரண மனிதரா? நூறு தடவை பயிற்சி செய்ய வேண்டும்’’ என்று கூறி மறுபடியும் பயிற்சி செய்ய வைத்தார்.
பூஜித்த ஜயசுந்தர பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, சாதாரண பொலிஸ் அதிகாரி ஒருவர் – 10 தடவையும், ஐ.பி. 15 தடவையும், ஏ.எஸ்.பி. 20 தடவையும், எஸ்.எஸ்.பி. 30 தடவையும், டி.ஐ.ஜி. 50 தடவையும், மூத்த டி.ஐ.ஜி. 75 தடவையும், ஐ.ஜி.பி. 100 தடவையும் பயிற்சி செய்யவேண்டும் எனக் கூறினார்.