தனியார் பேருந்து சாரதி ஒருவரை தாக்கி, அச்சுறுத்தியமை தொடர்பில், பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரது முகவராகச் செயற்பட்டவருக்கு தலா 1500 ரூபாய் தண்டப்பணமும், தலா இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனையும் வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதவான் நீதிமன்றத்தில், பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரது முகவராகச் செயற்பட்டவரை முன்னிலைப்படுத்தியப்போது நீதவான் சின்னத்துறை சதீஸ்வரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள தனியார் பேருந்துத் தரிப்பிடத்தில் சேவைக்காக தரித்து நின்ற பேருந்தின் சாரதியையும், நடத்துனரையும் அச்சுறுத்தி சாராயம் வாங்கித்தருமாறு இவர்கள் இருவரும் வற்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சாரதி அதற்கு மறுப்பு தெரிவித்தமையினால் சாரதி மீது இருவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து சாரதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனடிப்படையில் பொலிஸார் அவர்களை கைது செய்து, நீதிவான் நீதமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவ்விடயம் தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரது முகவராகச் செயற்பட்டவருக்கு இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.