வடமாகாண சபை கேட்பது போல காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாதென அரசாங்கம் கூறியுள்ளது.காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடக்குக்கு வழங்குவது இன்னுமொரு ஆயுதப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகள் புத்துயிர் பெறவும் வழிவகுக்கும் என உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலை புலிகள், ஐரோப்பாவில் முழுமையாக தொழிற்படுகின்றது. அவர்கள், இலங்கையில் புத்துயிர் பெற அனுமதிக்கப்பட்டால் முதலில் துன்புறும் ஆட்களாக யாழ்ப்பாணத்து மக்களே இருப்பர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊவா மாகாண சபைத்தேர்தல் பிரசாரக்கூட்டமொன்று பசறையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்க அனுமதிக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்பதை எம்மால் கொடுக்க முடியாது. வடமாகாண சபை கேட்பதையும் நாம் கொடுக்க முடியாது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய பிரதமர் நரோந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பில், ஐக்கிய இலங்கை என்ற சட்டத்தினுள் சமத்துவம், கௌரவம், சுயமரியாதை என்பவற்றுக்கான தமிழ் சமுதாயத்தின் அபிலாஷைகளை திருப்தி செய்யும் ஓர் அரசியல் தீர்வின் அவசியத்தை மோடி வலியுறுத்தினார்.
ஓர் அரசியல் தீர்வை காணும் நோக்கில் இலங்கையிலுள்ள பங்குதாரர்களும் பங்குடமை, பரஸ்பர விளக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆக்கபூர்வமாக உழைக்க வேண்டுமென மேலும் வலியுறுத்தினார்.
இலங்கை அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மீது இது கட்டியெழுப்பப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை பகிரும் இந்தியாவின் ஆதரவுடனான 1980 ஆம் ஆண்டுகளின் திருத்தத்தை சுட்டிக்காட்டியே அவர் கூறினார்.