பொலிஸ் உத்தியோகத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள்

பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர் யுவதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பிற்கு அமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொலிஸ் உத்தியோகத்தர், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்பதவி நிலைக்காக விண்ணப்பிப்போர் சாதாரண தர பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் தோற்றி கணிதம், தாய்மொழி உட்பட 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.

ஆண்கள் 5 அடி 4 அங்குலத்திற்கு குறையாத உயரத்தினையும் மூச்சுவிட்ட நிலையில் 30 அங்குலம் மார்பு சுற்றினையும் கொண்டிருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பதாரிகள் 5 அடி 2 அங்குலத்திற்கு குறையாதவர்களாக இருக்க வேண்டும். குறைந்த உயரம் தொடர்பாக விண்ணப்பங்களை பொறுத்து பொலிஸ்மா அதிபரினால் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அவசர ஆட்சேர்ப்பு நியமனம் அந்தந்த மாகாணங்களிலேயே இடம்பெறும் எனவும் நேர்முகத் தேர்வுகளும் அந்தந்த மாகாணங்களிலேயே இடம்பெறும் எனவும் ஆட்சேர்ப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 1800 தமிழ் மொழி வெற்றிடம் காணப்படுவதாகவும் பயிற்சி காலத்தில் சம்பளம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக காணப்பட்டுள்ளதாகவும் வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் 18 முதல் 28 வரை வயதெல்லை கொண்ட திருமணமாகாத இளைஞர், யுவதிகள் விண்ணப்பங்களைப் பெற்று தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜெகத் குமார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வடக்கில் காணப்படும் தமிழ் மொழி உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் பொலிஸ் சேவையை விரிவுபடுத்துவதற்குமான அவசர ஆட்சேர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும் அரச வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போரும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப படிவங்களை கிளிநொச்சி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பலர் வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் நிலையில், மிக குறைவான விண்ணப்பங்களே இதுவரை கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் சேவையில் இணைய விரும்பும் இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத்திலும் மாகாணத்திலும் தற்போது காணப்படும் குற்ற செயல்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்களிற்கான பாதுகாப்பு மற்றும் சேவைகளுடன் நாட்டின் சட்டத்தை பாதுகாக்கவும் நடைமுறைப்படுத்தவும் பொலிஸ் சேவையில் இணைந்து பணியாற்ற கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts