இன,மத,மொழி வேறுபாடின்றி அனைத்து பொது மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க வேண்டும் எனும் நோக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 5மாத தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி நெறியின் 14வது தொகுதியினருக்கான பயிற்சி நெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்திலுள்ள இலங்கை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது.
கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஏ.றஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயகொட ஆராச்சி கலந்து கொண்டு வட-கிழக்கு மாகாணங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 148 சகோதர இன பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி நெறியினை ஆரம்பித்து வைத்தார்.
நாட்டின் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சகோதர இன பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன் கருதி இந்தப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அதிதியாக இலங்கை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறலந்தை,மஹியங்கனை,கல்லடி ஆகிய கிளைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஹேவா பத்திரன உட்பட பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.