பொலிஸின் சித்திரவதையால் சந்தேகநபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த இரண்டாவது சம்பவமும் பதிவாகியுள்ளது.

கடந்த மாத இறுதியில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த அதே பாணியில் இந்த இளைஞரும் முயற்சித்துள்ளார்.

இந்தச் சம்பவம் புதன்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலைய தடுப்புக்காவல் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

தனக்கு நடந்த கொடுமைகளை அந்த இளைஞர் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் நேற்று வெளிப்படுத்தினார். அவருடன் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞனும் பொலிஸ் நிலையத்தில் நடந்தவற்றை நீதிவான் முன்னிலையில் தெரிவித்தார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தினர்.

சந்தேகநபர்களை இரண்டு நாள்களுக்கு மேலாக பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர் என்று நீதிவானிடம் முறையிடப்பட்டது.

“என்னை மூன்று நாள்களாகத் தடுத்துவைத்து பொலிஸார் கடுமையான சித்திரவதைக்குட்படுத்தினர். அதன் வலி தாங்க முடியாமல் பிளேட்டால் எனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தேன்.பொலிஸாரின் தாக்குதலால் எனது கைகள் இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று சந்தேகநபர் நீதிவானிடம் தெரிவித்தார்.

தற்கொலைக்கு முயற்சித்த சந்தேகநபரின் நிலமையையும் தனக்கு நடந்த சித்திரவதையையும் மற்றைய சந்தேகநபரும் நீதிவானிடம் கூறினார்.

சந்தேகநபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி பெற்றுக்கொண்ட சட்ட மருத்துவ அறிக்கையும் பொலிஸார் சமர்ப்பித்தனர்.

சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரித்த நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், அவர்களை பிணையில் விடுக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, கஞ்சா கலந்த சுருட்டுடன் நடமாடினார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். அந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு விசாரணைக்கு சந்தேகநபர் மன்றில் தோன்றத் தவறியதால், அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணை நடைமுறைப்படுத்திய கோப்பாய் பொலிஸார் கடந்த நவம்பர் இறுதியில் சந்தேகநபரைக் கைது செய்தனர். மூன்று நாள்களாக சந்தேகநபரை சட்டவிரோதமாகத் தடுத்துவைத்திருந்த கோப்பாய் பொலிஸார், அவரை நீதிமன்றில் முற்படுத்தவில்லை.

இந்த நிலையில் நான்காவது நாள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் சந்தேகநபர் முற்படுத்தப்பட்டார். அவரது கழுத்து மற்றும் கையில் பன்டேஜ் போடப்பட்டிருந்தது. நடப்பதற்கு கஷ்டப்பட்டு சந்தேகநபர் எதிரிக் கூண்டில் ஏறினார்.

சந்தேகநபரின் நிலை அறிந்த மன்று, என்ன நடந்தது? என்று கேள்வியெழுப்பியது.

“பொலிஸார் என்னை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கைது செய்த நாளிலிருந்து என்னைக் கடுமையாகத் தாக்கினார். தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தார்கள். கையில் நெருப்பால் சுட்டார்கள். 3 நாள்களாக எனக்கு பெரும் சித்திரவதை செய்தனர். பொலிஸாரின் சித்திரவதையைத் தாக்க முடியாமல் எனது கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தேன். அதன்பின்னர்தான் என்னை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தனர்” என்று சந்தேகநபர் கண்ணீர்விட்டு அழுதார்.

சந்தேகநபரால் கூறப்பட்டவை தொடர்பில் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பிய மன்று, அவர்களை கடுமையாக எச்சரித்தது. அத்துடன், சந்தேகநபரை விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts