யாழ்.நகரை அண்டியுள்ள அரியாலை கிழக்கு பகுதியில் மணல் கடத்தல் நடவடிக்கையினை முறியடிக்க சென்ற அதிரடிப்படையினருக்கும், மணல் கடத்தல்காரா்களுக்கும் இடையில் தர்க்கம் மூண்டுள்ளது.
மோதலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர்.
அரியாலை கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து அதனை முறிக்க சிறப்பு அதிரடிப்படையினர் நேற்றிரவு அங்கு சென்றிருந்தனர்.
அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனையடுத்து சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் அங்கு விரைந்தனர்.
சிறப்பு அதிரடிப் படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தாக்குதல் உடன் தொரடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், சந்தேகநபர்களுக்குச் சொந்தமான இரண்டு சவல்கள், மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் உழவு இயந்திரம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினர் மூவருக்கும் காயம் எதுவும் இல்லை என அறியமுடிகிறது.