இலங்கையில் பொலிஸாரைப் பகைவர்களாகவும் எதிரிகளாகவும் மக்கள் பார்ப்பதை விடுத்து நண்பர்களாக பார்க்கவேண்டும் என்று யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுமக்கள் பொலிஸாரை தங்கள் எதிர்கள் போலவே பார்த்து வருகின்றனர் இந்த நிலை மாறவேண்டும் பொலிஸாரை நண்பர்களாக பார்க்கும் போது தான் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான நல்லுறவு மேம்படுத்தப்படும் என்றார்.
அத்துடன் ஒரு நாள் அனைத்து பொலிஸ் நிலையங்களும் மூடப்பட்டால் சட்ட ஒழுங்குகள் எவ்வாறு இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
30 வருடகாலமாக பொலிஸ் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் யாழ் மாவட்டத்தில் பதவியேற்றமை மகிழ்ச்சியாளிப்பதாகவும் இங்கு போக்குவரத்து சம்மந்தமான விடயங்களில் முக்கிய கவனம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழில். 174 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் சிறு குற்றங்கள் புரிந்த குற்றச்சாட்டில் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 43 பேரும், குடிபோதையில் கலகம் விளைவித்த 09 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 08 பேரும், சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயம் வைத்திருந்த 02 பேரும், சட்டவிரோத சாராயம் வைத்திருந்த 02 பேரும், திருடிய குற்றச்சாட்டில் 11 பேரும், சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 10 பேர், சூழல் மாசடைதல் 08 பேர், கொலை குற்றச்சாட்டில் 02 பேர் , அடிகாயம் ஏற்படுத்திய 34 பேர், வீதி விபத்து 06 பேர், ஏனைய குற்றங்களுக்காக 37 பேருமாக 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வெங்காய வெடி வைத்திருந்த இளைஞர் கைது
முல்லைத்தீவு கள்ளப்பாடு பிரதேசத்தில் 10 வெங்காய வெடி வைத்திருந்த இளைஞர் ஒருவர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.கடந்த 20ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனிடம் இருந்த 10 வெங்காய வெடிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறுவர்களை அடித்து துன்புறுத்திய 4 பேருக்கு விளக்கமறியல்
கமரா மற்றும் கையடக்கத் தொலைபேசியினை திருடியதான குற்றஞ்சாட்டில் இரு சிறுவர்களை அடித்து துன்புறுத்திய 4 பேர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் .பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 17 ஆம் திகதி கையடக்கத் தொலைபேசி மற்றும் கமராவினை திருடியதாக கருதப்படும் இரு சிறுவர்களுடன் கையடக்கத் தொலைபேசியின் உரிமையாளர் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து சாதுரியமாக கதைத்து அவர்களை பிடித்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
அவர்கள் இருவரும் 13, 14 வயதுடைய சிறுவர்கள் என்பதால் அவர்களை அடித்து துன்புறுத்தியது குற்றமாக கருதப்பட்டு, அதே இடத்தினைச் சேர்ந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியவேளை, நீதிவான் அவர்கள் 4 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்ததாக அவர் மேலும் கூறினார்.