யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்.
‘யாழ்ப்பாணம், கந்தர்மடப் பகுதியிலுள்ள வீடுகளில் வான் ஒன்றில் வந்த சிலர், தாம் யாழ்ப்பாணப் பொலிஸார் என தெரிவித்து, கொழும்பில் நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லத்திற்கு நிதி சேகரிப்பதாகக் கூறி பணம் வசூலித்து வருகின்றனர். இருப்பினும், இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியாது’ என அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண பொலிஸார் அவ்வாறு எந்தச் சிறுவர் இல்லங்களையும் நடத்தவும் இல்லை அத்துடன், அவ்வாறு பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் ஈடுபடவும் இல்லையென அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு செயற்படுபவர்களை பொதுமக்கள் அடையாளம் காட்டினால் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.