யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டையடுத்து இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியுள்ளமை பெரும் கவலையளிக்கும் விடயமாகும். பொலிஸாரின் அத்துமீறிய இத்தகைய செயற் பாடு குறித்து உரிய விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் மேலும் கூறியுள்ளதாவது,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் களான நடராஜா கஜன், பவுண்ராஜ் சுலக்சன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் காங்கேசன்துறை வீதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டை யடுத்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவமானது பெரும் கவலையளிக்கும் விடயமாகும்.
மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்தபோது பொலிஸார் தமது அத்துமீறிய அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற பல்கலைக் கழக மாணவர்களை பொலிஸார் மறித்த போது அவர்கள் நிறுத்தாமல் சென்றிருந்தால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவேண்டிய அவசியமில்லை. அவர்கள் யாராகவிருந்தாலும் துரத்திச்சென்று அவர்களைப் பிடித்திருக்கலாம். அல்லது எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்து அவர்களை நிறுத்த முயற்சித்திருக்கலாம். இதனைவிடுத்து அவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டுள்ளமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல.
இத்தகைய செயற்பாடானது பொலிஸாரின் அத்துமீறிய செயலை எடுத்துக் காட்டுகின்றது.
இந்த விடயத்தில் உரியவிசாரணை நடத்தப்பட்டு குற்றமிழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். இரண்டு அப்பாவி உயிர்கள் பலியான இந்த விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு நான் கொண்டுவந்ததுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் தமது பிள்ளைகளின் பிரிவால் துயருற்றிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்