பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கத்திற்கு இடித்துரைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது

சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் விட்டுவிடும் செயற்பாட்டையே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், இதற்கு இடமளிக்க முடியாதென்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடு தொடர்பில் அரசாங்கத்திற்கு இடித்துரைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்.நூலக மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரையில் சி.வி. மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இணக்க அடிப்படையில் ஜெனீவாவில் கைச்சாத்திட்ட பிரேரணையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து சட்டரீதியாகக் கேட்டு, அரசாங்கத்தின் கடப்பாடுகளை அதற்கு உணர்த்துவதோடு, காலங்கடத்திச் செல்வதைக் கண்டித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கடமையும் உண்டென அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 70ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக எதிர்வரும் 2030ஆம் ஆண்டில் அடைய எதிர்பார்க்கப்படும் நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளை கவனத்திற் கொண்டு எமது அபிவிருத்திப் பாதையை நிர்ணயிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு என்பதையும் அரசாங்கத்திற்கு எடுத்துரைக்க வேண்டுமென முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts