Ad Widget

பொறுப்பதிகாரி உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை, சித்திரவதைக்கு உள்ளாக்கி, கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களான, கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்றுத் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.

இதேவேளை “இது தொடர்பான வழக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி விசார​ணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” எனவும் நீதவான் கூறினார்.

நேற்றைய தினம், குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 4ஆவது சந்தேகநபரான மயூரன் என்பவருக்கு எதிரான குற்றப்பத்திரம் – தமிழில் வாசிக்கப்பட்டதுடன், ஏனைய நால்வருக்கும், சிங்கள மொழியில் வாசிக்கப்பட்டது.

அத்துடன், 1 தொடக்கம் 6 வரையான சாட்சியங்களுக்கு அழைப்பு விடுக்குமாறு, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு, நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

இந்த வழக்கில், 5 பேர் குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்களில் ஒருவர், கடந்த 10ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், ஏனைய 4 பேருக்கு எதிராக, கடந்த 10ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய, கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பொலிஸார், சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவரை கடந்த 13ஆம் திகதி கைதுசெய்து, கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து, அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts