பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஜனாதிபதி செயலக பிரிவின் ஊடாகவும், அமைச்சுக்கள் ஊடாகவும் செயற்படுத்த முறையான செயலொழுங்கினை முன்னெடுப்பேன்.
சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்த அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களின் யோசனைகளை எந்நேரத்திலும் என்னிடம் முன்வைக்கலாம். நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.
தற்போது நடைமுறையில் உள்ள வரவு –செலவு திட்டத்தை மறுபரிசீலனை செய்து குறைநிரப்பு பிரேரணை ஊடாக நாட்டு மக்களுக்கு புத்தாண்டு காலத்தில் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடு எதிர்க்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சர்வகட்சி மாநாடு இடம்பெற்றது.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தில் பிரதான எதிர்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி,மக்கள் விடுதலை முன்னணி உட்பட பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சிகள் கலந்துக்கொள்ளவில்லை.
சர்வகட்சி மாநாட்டில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்,ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்,புளோட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்டோரும்,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திகாந்தன் (பிள்ளையான்),
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் சார்பில் பேராசிரியர் திஸ்ஸ விதாரன,அத்துரலியே ரத்ன தேரர் உள்ளிட்டோரும்,பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார்,எக்சத் மஹஜன கட்சியின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி,மஹஜன கட்சியின் உறுப்பினர் அசங்க நவரத்ன,உட்பட பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள்,மற்றும் இராஜாங்க அமைச்சர்களும்,மத்திய வங்கியின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று காலை 10.30 மணியளவில் சர்வகட்சி மாநாடு ஆரம்பமானது.நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்;ள நிலைமையில் சர்வ கட்சி மாநாட்டை நடத்துவதன் நோக்கம் குறித்து ஜனாதிபதி ஆரம்ப உரையாற்றினார்.அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டதாக சர்வ கட்சி மாநாடு உண்மையான நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாடு எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் தீர்வினை செயற்படுத்த அனைத்து தரப்பினரது ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்.
உண்மையான நோக்கத்தில் சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது.பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் .பல்வேறு காரணிகளினால் சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்த அரசியல் கட்சிகள் தங்களின் யோசனைகளை தொடர்ந்து என்னிடம் முன்வைக்கலாம் என குறிப்பிட்ட ஜனாதிபதி நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையினை தெளிவுப்படுத்துமாறு மத்திய வங்கியின் ஆளுநரிடம் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தீர்மானமிக்க நிலைமையில் உள்ளது.நெருக்கடியினை வெற்றிக்கொள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் சர்வதேச உதவியை பெற வேண்டுமாயின் முதல் சர்வதேசத்துடன் கொண்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
அரசியல் குற்றச்சாட்டை முன்வைக்க விரும்பவில்லை.இருப்பினும் பொருளாதார நெருக்கடியினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.நாட்டு மக்களுக்கு 50 சதவீதத்தினாலவது அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கும் அரச செலவிற்கும் தொடர்பற்ற தன்மை காணப்படுகிறது.நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியமாகும்.நடைமுறையில் உள்ள வரவு செல திட்டத்தை மறுபரிசீலனை செய்து புதிய வரவு செலவு திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும் சாதகமாக சூழலை ஏற்படுத்துங்கள்.அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தையும்,அரசியல் தீர்வினையும் செயற்படுத்துங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என அரசியல் மட்டத்தில் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நடைமுறையில் உள்ள வரவு-செலவு திட்டத்தை மறுசீரமைத்து குறைநிரப்பு பிரேரணை ஊடாக நாட்டு மக்களுக்கு புத்தாண்டு காலத்தில் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நாட்டின் நலனை கருத்திற்கொண்டு சர்வகட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை முறையாக செயற்படுத்த உரிய செயலொழுங்கு செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததை தொடர்ந்து பகல் 2.15 மணியளவில் சர்வகட்சி தலைவர் கூட்டம் நிறைவடைந்தது.