பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொருத்து வீடு எங்களுக்கு பொருந்தாத வீடு என்ற தொனிப்பொருளில் இன்று காலை 8.30 அளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டம், ஆரம்பமாகியுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் பொருத்து வீடுளை நிர்மாணிக்க ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், பயனாளிகளான மக்களும் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், இந்த திட்டத்திற்கு எதிராக முதன்முறையாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வாழ்க்கையே திண்டாட்டம் wi – fi இல் கொண்டாட்டம், விளையாடாதே விளையாடாதே வீட்டுத்திட்டத்தில் விளையாடாதே, வேண்டாம் வேண்டாம் பொருத்து வீடு வேண்டாம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்கார்கள் பங்கேற்றுள்ளனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஆரம்பத்தில் இருந்தே பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் இதுவரை நிரந்தர வீடுகள் இன்றி கடந்த ஏழு ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

பொருத்து வீடுகள் தமது சூழலுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட மக்கள், தமது வாழ்க்கை முறை, தமது பிரதேசத்தின் காலநிலை, பாரம்பரிய கட்டடமுறை என்பவற்றை கருத்திற்கொண்டு வீடுகளை அமைத்துத்தருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts