பொருத்து வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு சாபம்! அங்கஜன்

பொருத்துவீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு சாபம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிகழ்வு நேற்றைய தினம் 11.30 மணியளவில் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லிணக்கம் என்பது வடக்கு கிழக்கு மக்களுக்கு மாத்திரமே என்றும், அவர்கள் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் பலரால் கூறப்பட்டு வந்தது. எனினும் நல்லிணக்கம் என்பது தெற்கில் இருந்தும், நாடு முழுவதுமிருந்தும் ஏற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

அவர் கூறியது போன்றே தற்போது செயலில் காட்டியுள்ளார். நாங்கள் தமிழர்கள் தான், எமக்கென்று தனித்துவமும் உண்டு, அதனை பேணுவதோடு இலங்கையர் என்ற மனப்பான்மையையும் நாம் வளர்த்து கொள்ள வேண்டும். மேற்கு நாடுகளில் உள்ள மக்கள் தமது நாட்டின் ஒட்டுமொத்த வெற்றிக்காகவும் ஒன்றிணைந்து போராடியே பல வெற்றிகளை கண்டுள்ளனர். அதேபோன்று நமக்குள்ளும் பல மதங்கள், இனங்கள் காணப்பட்டாலும் நாட்டின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

எமது மக்களுக்கு பல துன்பங்கள் வந்திருந்தன. அதில் ஒன்று தமிழ் மக்களுக்கு சாபமாக அமைந்ததுதான் அண்மையில் கொண்டுவரப்பட்ட பொருத்து வீடு. அதனை தடுத்து நிறுத்துவதில் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் முன்னாள் செயலாளரும் தேசிய நல்லிணக்க அமைச்சின் இந்நாள் செயலாளருமான சிவஞானசோதி மிகவும் துணிகரமாக செயற்பட்டிருந்தார். நான் உட்பட எமது மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இந்த பொருத்து வீட்டை எதிர்த்திருந்தனர்.

இந்த எதிர்ப்புக்களை அடுத்து குறித்த பொருத்து வீட்டு திட்டம் கைவிடப்பட்டிருந்தது. இருந்தும் தற்போது அந்த வீட்டு திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் எமது மக்களுக்கு எது விருப்பமோ அதனை வழங்குமாறே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஆகையால் பொருத்து வீடு தொடர்பில் நாம் அலட்டிகொள்ள தேவையில்லை என்றார் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்.

இதேவேளை குறித்த வீட்டு திட்டம் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் முதலாவதாக அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts