பொருத்து வீடு வேண்டாம் என்று கூட்டமைப்பு சொன்னால், வேறு வீட்டுத்திட்டத்தை கொண்டு வரவேண்டும்

“பொருத்து வீடு வேண்டாம் என்று கூட்டமைப்பு சொன்னால், வேறு வீட்டுத்திட்டத்தை கொண்டு வரவேண்டும்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், தெரிவித்தார்.

வவுனியா ரம்பவெட்டி கிராமத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, புதன்கிழமை அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், “பொருத்து வீடுகள் இங்குள்ள மக்கள் வாழ்வதற்கு சாத்தியமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கூறப்படுகினன்றது.

இது தொடர்பில் ஒழுங்கான முடிவை எடுக்க வேண்டும். ஏனெனில், கூட்டமைப்பிலே உள்ள சிலர் , இந்த வீடாவது மக்களுக்கு கிடைத்து நிம்மமதியாக வாழட்டும் என அமைச்சரிடம் கேட்கின்றனர். ஆனால், சிலர் இந்த வீடு வேண்டாம் என்கின்றனர்.

இது தொடர்பாக மக்களை குழப்பாமல், யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டை மக்கள் பார்வையிட்டு, அதில் வாழ்வது சாத்தியமா என பார்க்கவேண்டும். ஏனெனில், ஒரு வீடு கிடைத்துவிட்டால் மாற்று வீடு பின்னர் கிடைக்கப்போவதில்லை.

இந் நிலையில், அமைச்சர் இந்த வீடு நல்லது என்கின்றார். எனவே, மக்கள் தெளிவு பெறவேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு இந்த வீடுகள் தேவையில்லை என்றால், அதனை ஒருமித்த முடிவாகவும் இறுதி முடிவாகவும் ஜனாதிபதி, பிரதமருடன் கதைத்து, 65 ஆயிரம் வீடுகளுக்கு பதிலாக வேறு வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்க​​வேண்டும்.

எமக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் வீடுகள் தேவையாகவுள்ளன. விரைவாக உறுதியான முடிவை எடுத்து, மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

Related Posts