வடக்கு மாகாணத்தில் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபை உட்பட பல்வேறு சமூக அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், வடக்கு மாகாணத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10,000 வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தைப் புறக்கணித்து பொருத்து வீடுகளை அமைப்பதற்கு முடிவெடுத்தால் தாம் தமது பதவிகளை இராஜினாமாச் செய்வோமென தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, பொருத்து வீடுகளை மக்களே அமைத்துத் தருமாறு கோருவதாகவும், இதனடிப்படையிலேயே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10,000 ஆயிரம் வீடுகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 65,000 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முயற்சித்து வருகின்றார்.
இந்நிலையில், சென்றவாரம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் வலிகாமத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருத்து வீடு தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 10,000 பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.