பொருத்தமான நடிகர் கிடைத்தால் ரஜினி வாழ்க்கையைப் படமாக்கலாம் – மணிரத்னம்

ரஜினிகாந்த் வாழ்க்கையை படமாக எடுப்பது நல்ல யோசனைதான்… ஆனால் அதற்கேற்ற பொருத்தமான நடிகர் கிடைப்பது மிகக் கடினம்’ என்று இயக்குநர் மணிரத்னம் கூறினார்.

8-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மணிரத்னம், பார்வையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது ‘எம்ஜிஆர், அம்பானி போன்ற பல முன்னணி நபர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படங்கள் எடுத்துள்ளீர்கள். ஏன் ரஜினிகாந்த் வாழ்க்கையை மையப்படுத்தி படம் எடுக்கக்கூடாது?’ என்று மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பினர்.

அதற்கு இயக்குநர் மணிரத்னம், “ரஜினிகாந்த் வாழ்க்கையைப் படமாக எடுப்பது நல்ல யோசனைதான். ஆனால் ரஜினிகாந்தின் ஆளுமையை திரையில் கொண்டு வர, அதற்கு ஏற்ற பொருத்தமான நடிகர் கிடைத்தால்தான் என்னால் அதைச் செய்ய முடியும். அப்படி ஒரு நடிகர் கிடைப்பாரா?

நான் ரஜினியுடன் ஒரே ஒரு முறை தான் வேலை பார்த்துள்ளேன். அது அற்புதமான அனுபவம். ரஜினி என்ற நட்சத்திரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்த நடிகரை என்னால் முடிந்தவரை வெளிக்கொண்டு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

தன் தொழில்மீது அவருக்கிருக்கும் அர்ப்பணிப்பு எனக்குப் பிடிக்கும். நாங்கள் மைசூரில் ‘தளபதி’ படப்பிடிப்பில் இருக்கும்போது அவரது ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்துவிடுவார்கள். பெங்களூரிலிருந்து கூட அவ்வளவு தூரம் பயணம் செய்து அவரைப் பார்ப்பதற்காகவே பலர் வந்தனர். அது படப்பிடிப்புக்கு தொந்தரவாக இருந்தாலும் அவர் முடிந்தவரை ரசிகர்களை சந்தித்துப் பேசுவார், படப்பிடிப்பு பாதிக்காமலும் பார்த்துக் கொள்வார்,” என்று பதிலளித்துள்ளார்.

Related Posts