பொய்யான வாக்குறுதிகளை வழங்கமாட்டேன் – ஜனாதிபதி

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளை கொடுப்பார்களே தவிர, செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நான் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கமாட்டேன். சொல்வதை செய்வேன், அதனை கடந்த 9 வருடங்களில் செய்தும் காட்டியுள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

mahintha

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ். ரில்கோ விடுதியில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

எனது அரசாங்கம் பல்வேறு துறைகளில் அபிவிருத்திகளை செய்துள்ளது. எங்கள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகளை நீங்கள் வடக்கில் அவதானிக்க முடியும். கல்விக்காக பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். தற்போது, யாழ்ப்பாணத்தில் கலை மற்றும் கலாசாரத்துடன் இணைந்து கல்வியும் ஒரு நல்ல தரத்தில் இருக்கின்றது.

மேலும், உயர்தரக்கல்வி நல்ல முறையில் யாழ்ப்பாணத்திலிருந்த காரணத்தால் கணிதப்பிரிவில் தேசிய மட்டத்தில் யாழ்.மாணவன் ஒருவன் முதலிடம் பெற்றார்.

ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றுவதுக்கு முன்னேற்றகரமான பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். அதனை தொடர்ந்தும் முன்னேற்றகரமாக கொண்டு செல்ல மக்களின் ஆதரவு தேவை.

கல்வியில் கணிணி மற்றும் தொழில்நுட்ப அறிவை புகுத்தும் பொருட்டு, மஹிந்தோதய ஆய்வுகூடங்களை அமைத்து கல்வியை வளர்த்துள்ளேன். மாணவர்கள் கல்வி அறிவுடன், தங்கள் தனித்திறமையை வளர்த்து உலகத்துடன் போட்டிபோட்டு தங்களை வளர்த்துக் கொள்ளத்தக்க வகையில் பல வசதிகளையும் சலுகைகளையும் மேற்கொண்டுள்ளேன்.

அதேவேளை, 24 வருடங்களின் பின்னர் யாழ். தேவியை கொண்டு வந்தது போல, வடக்கு அதிவேக நெடுஞ்சாலையையும் அமைத்துக் கொடுப்பேன்.

மருத்துவத்துறையில் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை செய்துள்ளேன். நாங்கள் போகும் பாதை அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். சமாதானம், அபிவிருத்தி எமது பிரதான நோக்கம். நாம் பின் நோக்கி போகாமல் முன்நோக்கி செல்ல வேண்டும். அப்போது தான் எமது நாடு மேலும் வளர்ச்சி அடையும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Related Posts