பொய்யான முறைப்பாடு செய்த பெண்ணை பிறிதொரு வழக்கில் கைது செய்ய நீதிவான் அறிவுறுத்தல்!!

பொய் முறைப்பாடு வழங்கியதுடன் , குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் பக்க சார்பாக நடந்து கொண்டார்கள் என குற்றம் சாட்டிய பெண் , நீதிமன்றில் வழக்கு விசாரணை நடந்த போது, தனது முறைப்பாட்டை மீள பெறுவதாக மன்றில் கூறியதை அடுத்து குறித்த பெண்ணை மற்றொரு வழக்கைப் பதிவு செய்து கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான், பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். அந்நிலையில் விவாகரத்து பெறாது , அப்பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு மே 25ஆம் திகதி முச்சக்கர வண்டி சாரதி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும், தாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் ஒளிப்படங்களை காட்டி பணம் கேட்டு துன்புறுத்துகின்றார் என நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

அந்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , தனது முறைப்பாட்டினை பொலிஸார் பக்க சார்பாக விசாரணை செய்வதாக தனக்கிருந்த அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி காங்கேசன்துறை பிரிவிற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிட்டார்.

அதனால், மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கட்டளையின்படி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் முறைப்பாட்டு பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன் மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் ஆகியோர் இடம் மாற்றப்பட்டு அவர்களுக்கு ஒழுக்காற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அதன் பின்னர் அந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , முறைப்பாட்டாளரான குறித்த பெண் நீதிமன்றில் தனக்கு பாலியல் தொல்லை இடம்பெறவில்லை என்றும் தான் தற்போது குறித்த முச்சக்கர வண்டி சாரதியுடன் ஒற்றுமையாக வாழ்கிறேன் என விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் பாலியல்தொல்லை, பாலியல் ரீதியான ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தியமை, பொலிஸார் பக்கசார்பாக நடந்தமை போன்ற பொய் முறைப்பாடுகளை செய்தமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியும்.

பிறிதொரு வழக்கை பதிவு செய்து அந்தப் பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான், நெல்லியடி பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.

குறித்த பெண் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் மகளாவார். அதனூடான செல்வாக்கின் அடிப்படையிலையே பொலிஸாருக்கு எதிராக பொய் முறைப்பாடு அளித்து பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts