ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணியில் பங்களிக்கும் என்றாலும், பொது வேட்பாளர் தொடர்பில் அதிகாரபூர்வமாக இன்னமும் எந்த ஒரு நிலைபாட்டையும் எடுக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனை சந்திக்க எண்ணியுள்ளதாகவும் மனோ கணேசன், இதன்போது தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் தனது டுவீட்டர் சமூக தளத்தில் ‘முதல்வர் விக்னேஸ்வரனுக்கும், எனக்கும், ஐக்கிய இலங்கை வட்டத்துக்குள், அ முதல் ஃ வரை அனைத்தையும் அலசும், முக்கிய கலந்துரையாடல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனான சந்திப்பில் பல்வேறு பரஸ்பர சமகால முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் உரையாடினோம். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், நமது ஜனநாயக மக்கள் முன்னணி எதிரணியில் பங்களிக்கும் என்றாலும் பொது வேட்பாளர் தொடர்பில் அதிகாரபூர்வமாக இன்னமும் எந்த ஒரு நிலைபாட்டையும் நாம் எடுக்கவில்லை எனவும், அது தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை சந்திக்க எண்ணியுள்ளதாக நான் விக்னேஸ்வரனிடம் தெரிவித்தேன்.
அதுபோலவே, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை எனவும், அது தொடர்பில், ஊடகங்களில் பல கருத்துகள் கூறப்பட்டாலும்கூட, ஒரு அவசரப்படாத போக்கையே தமது கட்சி தலைமை முன்னெடுப்பதாக விக்னேஸ்வரன் என்னிடம் தெரிவித்தார். அத்தகைய ஒரு முடிவெடுக்கும் வேளையில், வடமாகாண முதலமைச்சர் என்ற அடிப்படையில் எதிர்நோக்கும் பாரிய சிக்கல்களை தமது கட்சி கணக்கில் எடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
முதல்வராக தெரிவு செய்யப்பட்ட வேளையில், வாக்களித்த மக்களினதும், தனது கட்சியின் சிலரதும் அதிருப்திகளை எதிர்கொண்டு கொழும்புக்கு வந்து, அலரி மாளிகையில் பதவி பிரமாணம் செய்து தனது நல்லிணக்கத்தை அரசுக்கு காட்டியதாக விக்னேஸ்வரன் கூறினார்.
அன்று நான் ஜனாதிபதியின் முன்னால் பதவி பிரமாணம் செய்துகொள்ளாமல் இருந்திருந்தால், இன்று அதை ஒரு காரணமாக அரசு கூறிக்கொண்டிருக்கும். ஆனால், இந்த அரசு எம் நல்லெண்ணத்துக்கு பரஸ்பர நல்லெண்ணம் காட்டாதது மாத்திரமல்ல, எமக்கு எதிராக பகைமையைதான் காட்டுகிறது.
ஆனால் அன்று நான் முன்வந்து நல்லிணக்கத்தை காட்டியதால்தான் இப்போது அரசின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது. இதை அன்று தன்னை விமர்சித்த பலர் இன்று புரிந்து கொண்டுள்ளதாக விக்னேஸ்வரன் கூறினார்.
மேல்மாகாணத்தில் முதல்வர் பிரசன்னா ரணதுங்க கொண்டுள்ள அதிகாரங்கள் தனக்கு மறுக்கப்பட்டுள்ளதாக விக்னேஸ்வரன் சொன்னார். மாகாண செயலாளரை தன்னால் நியமிக்க முடியவில்லை. இங்குள்ள ஆளுநர் அளவி மௌலானா, சம்பிரதாய பூர்வ கடமைகளை செய்கிறார். ஆனால், அங்குள்ள ஆளுநர் சந்திரசிறி, அரசியல் நிர்வாக முடிவுகளை எடுத்து செயற்படுகிறார்.
இதுதான் வித்தியாசம். இதை சிங்கள மக்களுக்கு எடுத்து கூறும்படி என்னிடம் கோரிக்கை விடுத்தார். தானும் இதை செய்ய விரும்புவதாகவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
வடமாகாணசபைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி மற்றும் முதலமைச்சர் என்ற முறையில் தான் எதிர்கொள்ளும் திட்டமிட்ட தடைகளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது தனது கட்சி கவனத்தில் கொள்ளும் என தான் நம்புவதாக அவர் எனக்கு கூறினார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் தனக்கு உள்ள விசேட புரிந்துணர்வை முன்னிறுத்தி, அவருடனான கலந்துரையாடல்களை தொடர்ந்தும் கிரமமாக முன்னெடுக்க போவதாக மனோ கணேசன் கூறினார்.
உண்மையான தேசிய ஐக்கியத்தை உருவாக்கும் நோக்கில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கு எடுத்து கூறும் கொள்கையை தமது கட்சி ஏற்கனவே முன்னெடுக்கின்றது.
இதற்கு மேலதிகமாக வடமாகாணசபை எதிர்கொள்ளும் திட்டமிட்ட தடைகளை, தென்னிலங்கை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் மூலமாக, சிங்கள மக்களுக்கு எடுத்துக்கூறும் ஒரு பொறிமுறையை விக்னேஸ்வரனுடன் இணைந்து தமது கட்சி உருவாக்கும் என மனோ கணேசன் மேலும் கூறினார்.