வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் 2013 ஆம் ஆண்டில் சிவில் ஆவணங்களை பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் தகுதியான அனைவருக்கும் வழங்கி முடிப்போம்.உரிய சான்றிதழ்கள் இன்றி எதிர்காலத்தில் யாரும் இருத்தல் கூடாது. அதற்கு ஏற்ற முறையில் நடமாடும் சேவைகள் கிராம அலுவலர் பிரிவு வாரியாக நடத்தப்படும். நடமாடும் சேவையை உரியமுறையில் பயன்படுத்தி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் எம்.பிரதீபன்.
அச்சுவேலி இராஜமாணிக்கம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற பதிவு அலுவலகத்தின் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து பிரதேச செயலர், கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.
இந்தவிடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பொதுமக்கள் தங்களுக்கு அவசியம் தேவையான சிவில் ஆவணங்களை உரிய வேளையில் உரியமுறையில் பெற்றுக்கொள்ள வேண்டும். பிறப்புச்சான்றிதழ், திருமணச்சான்றிதழ் , இறப்புச்சான்றிதழ் போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் உரிய வேளையில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்குறித்த ஆவணங்களின் அவசியம் தொடர்பாக பொது அமைப்புக்கள் சனசமூக நிலையங்கள் தமது பிரதேசம் சார் நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
வலிகாமம் கிழக்கில் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை உரியவர்களுக்கு வழங்கி முடிப்பதற்கான வேலைத் திட்டம் கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி நடமாடும் சேவைகள் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
2013 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னர் பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் உரியவர்களுக்கு வழங்கி முடிக்கப்படும். 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உரிய சான்றிதழ் இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது.
நடமாடும் சேவை மூலம் பதிவாளர் அலுவலகம் இலகுபடுத்தப்பட்ட நடைமுறைகள் மூலம் உரிய சான்றிதழ்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிவில் சான்றிதழ்களின் அவசியத்தை உணராத நிலை எதிர்காலத்தில் இருக்கக்கூடாது. என்று அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்களுக்கு அவசியம் தேவையான சிவில் ஆவணங்களை உரிய வேளையில் உரியமுறையில் பெற்றுக்கொள்ள வேண்டும்.