அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும்,தெல்லிப்பழை ஶ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவருமான கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்களின் அன்பான வேண்டுதல்.
உலகம் முழுவதும் வாழும் மக்கள் கொரோணா என்னும் கொடிய நோயின் துன்பத்திலிருந்து விடுபட அனைவரும் தொடர்ந்து பிரார்த்தியுங்கள்.உயிர்களைக் காப்பதற்காக தமது உயிரையும் பொருட்படுத்தாது மனித நேயத்தோடு செயற்படும் மருத்துவ சமூகத்துக்கும் ஏனையவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு அவர்களின் வாழ்வுக்காகவும் அனைவரும் கடவுளை மன்றாடுங்கள்.
இலங்கைத் திருநாட்டில் இக்கொடிய நோய் பரவாமல் இருப்பதற்காக பல ஒழுங்கு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு மருத்துவ சமூகமும்,ஏனைய பொறுப்பு மிக்க பெரியவர்களும் விடுத்த வேண்டுதலை அனைவரும் மதித்து நடவுங்கள்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டமை அவசர தேவைகளுக்கு மட்டும் என்பதை அனைவரும் உணருங்கள்.
மிகப்பாதுகாப்பாக இருக்கவேண்டிய காலமென மீண்டும் மீண்டும் மருத்துவ சமூகம் மன்றாடிக் கேட்டவண்ணமுள்ளார்கள்.
ஆனால் ஊரங்கு தளர்த்திய வேளை எமது சமூகம் பொறுப்பாக நடக்கவில்லையென பலரும் கவலையடைகிறார்கள்.
ஒரு நேரப்பசியையாவது போக்குவதற்கு உதவுங்கள் எனப்பலரும் குரல் கொடுத்த போது தங்கள் நாட்டின் அவலச்சூழலிலும் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் உதவினர்.அவர்களின் உதவிகளால் உலர் உணவும்,சமைத்த உணவும் ஊர்தோறும் பலர் வழங்கி உதவினர்.உள்ளூர் அமைப்புக்கள்,சமய நிறுவனங்கள் இளையதலைமுறை இரவு பகலாகச் செய்த தொண்டுகளை நினைத்துப்பாருங்கள்.
ஊரங்கு நீக்கப்பட்ட முதல் நாள் முதல் வேலையாக மதுபாணக் கடைகளில் வரிசையில் பலர் ஆரவாரமாக நின்று அவமானத்தை எம்மண்ணுக்கு தேடித்தந்துள்ளார்கள்.எனிமேலாவது சிந்தியுங்கள்.எங்கள் மீது இரக்கப்படும் சமூகம் எவ்வளவு தூரம் கவலைப்படுவார்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
சமூக ஒன்று கூடலைத் தவிருங்கள்.சகல வைபவங்களையும் ஒத்திவையுங்கள்.அனைவரும் பொறுப்புணர்வோடு கொடிய நோய் பரவாமல் காக்க உதவுங்கள்.
சகலதுறைசார்ந்த அதிகாரிகளும்,பணியாளர்களும் ,அமைப்புக்களும் மிகவும் ஒத்துழைத்து ,சமூகத்தைக்காக்கும் முயற்சியை தொடர வேண்டி அமைகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்