பொதுப்பணிகளில் படையினரை அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்கு!-பொ.ஐங்கரநேசன்

நாம் முன்னெடுத்த ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டாலும், எமது தேசிய விடுதலைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்திப்போராடினோமோ, அதேபடையினரைப் பொதுப்பணிகளில் நாம் அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்காகவே அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கோண்டாவில் ஸ்ரீ நாராயணா சனசமூகநிலையத்தின் 66 ஆவது ஆண்டுவிழா நேற்று வியாழக்கிழமை (19-04-2018) நிலைய முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கு மாகாணத்தின் ஆளுநர் றெஜினோல்ட் கூரே அவர்களை மாநகரசபையின் புதிய முதல்வர் ஆர்னோல்ட் அவர்கள் மரியாதையின் நிமித்தமாகச் சந்தித்துள்ளார். அப்போது, நகரை அழகுபடுத்துவதற்கு இராணுவத்தின் உதவியைப் பெற்றுத்தருவதாகத் தன்னிடம் ஆளுநர் அவர்கள் சொன்னதாக ஆனோல்ட் அவர்கள், ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அவர் இராணுவத்தின் உதவியை ஏற்றுக்கொள்வாரோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது, ஆனால், பொதுமக்கள் செய்யவேண்டிய பொதுப்பணிகளுக்கெல்லாம் இராணுவத்தைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

சனசமூகநிலையங்கள் சமூகப்பணிகளில் போட்டிபோட்டு ஈடுபட்டகாலம் ஒன்று இருந்தது. வீதிகளைச் சுத்தம் செய்வது, பொதுக்கிணறுகளையும் பூங்காக்களையும் பராமரிப்பது, குளங்களைத் தூர்வாருவது என்று சனசமூகநிலையங்கள் அவை அமைந்திருக்கும் கிராமங்களில் பொதுப்பணிகளை முன்னெடுத்துவந்துள்ளன. போராட்டகாலத்தோடு இந்தப்பணிகளை அரசசார்பற்ற நிறுவனங்கள் கையில் எடுத்தன. இப்போது அந்தச் சேவைகளில் இராணுவம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

இராணுவம் அவசரநிலைமைகளின்போது இடர்முகாமைத்துவங்களில் ஈடுபடுத்தப்படுவது உலகநடைமுறை. ஆனால் இங்கு இராணுவம் பொலுத்தீனும் அல்லவா பொறுக்குகின்றது. நாங்கள் செய்யவேண்டிய பணிகளில் எல்லாம் இராணுவத்தை நுழைய விடுவோமானால் ஊர்கூடித் தேர் இழுக்கும் பெருமையைக் கொண்டுள்ள நாங்கள், கடைசியில் இராணுவம்கூடித் தேர் இழுத்த சிறுமைக்கு ஆளாகவேண்டிவரும்.

இராணுவத்தைப் பொதுப்பணிகளில் பயன்படுத்துவது அரசியல்ரீதியாக எமக்குப் பாதகமானது.. இராணுவம் வெளியேறவேண்டும், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்கவேண்டும் என்று நாம் ஒருபுறம் போராடிக்கொண்டு, இன்னொரு புறம் இராணுவத்தைச் சமூகசேவைக்கும் அழைப்பது ஒன்றுக்கொன்று முரணானது. ஒருபோதும் ஏற்புடையதாகாது. இந்த நடைமுறையை அனுமதித்தால் இராணுவம் தமிழ்மக்கள் மீது கரிசனையாக உள்ளது, படையினரும் தமிழ் மக்களும் இரண்டறக்கலந்துவிட்டார்கள் என்று அரசோடு சேர்ந்து நாமும் சர்வதேசத்துக்குச் சொன்னவர்கள் ஆவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியின்போது குறித்தொதுக்கப்பட்ட நன்கொடைநிதியில் இருந்து 30 மாணவர்களுக்கு பொ.ஐங்கரநேசன் துவிச்சக்கரவண்டிகளை வழங்கிவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts