பொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை – கோட்டாபய ராஜபக்ஷ

பொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் தான் பதவி விலகத் தயார் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

gotabhaya

முஸ்லிம் அமைப்புக்கள் உட்பட்ட பல்வேறு தரப்புக்கள் இந்தக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இவையாவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தாம் அரசியலுக்கு வருவேன். அரசியலில் இறங்கிவிட்டால் தற்போதைய அரசியல்வாதிகளை விடவும் சிறந்த சேவையை என்னால் ஆற்றமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த செவ்வியின் முழு விபரம்…

கேள்வி: இதேபோன்றதொரு மோதலூடாக பல தசாப்தங்களாக அவலப்பட்ட அனுபவத்தின் பின்னணியில், இலங்கையில் அண்மையில் நடந்த, இனங்களுக்கிடையிலான வன்முறை பற்றி நீங்கள் கவலையுற்றுள்ளீர்களா?

பதில்: நிச்சயமாக, ஜனாதிபதியுடன் இணைந்து நிலையான சமாதானத்தை நிலைநிறுத்த ஒத்துழைத்த முதன்மையானவன் என்ற ரீதியில் நான் கவலைப்படுகிறேன். யுத்தம் முடிந்த பின்னர், நிலக்கண்ணி வெடிகள் அகற்றல், மீள் குடியேற்றம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, புனர்வாழ்வு உட்பட பலவற்றை சாதித்ததுடன், சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றையும் இந்த இடங்களுக்கு கொண்டுவந்தோம்.

எடுக்கப்பட்ட நிலையிலிருந்து உச்ச பலனை பெற நாம் விழைந்தோம். இந்த நிலைமையில் அண்மையில் நடந்த சம்பவங்களையிட்டு நான் மிகவும் துன்பமடைந்துள்ளேன். இவை எமது நாட்டை பற்றி மோசமான ஒரு தோற்றப்பட்டை கொடுத்துள்ளது. இலங்கையை மோசமான நாடாக சர்வதேச ஊடகங்கள் சித்தரிக்கின்றன. இது மிகவும் சோகமானது. இந்த சம்பவங்கள் இடம்பெற்ற காலமும் எம்மை பாதித்துள்ளது.

சர்வதேச சமுதாயத்தின் குறிப்பிட்ட பகுதியினரிடமிருந்து எமக்கு பெரும் சவால்கள் விடுக்கப்பட்டுள்ளன. மனித உரிமை பேரவையினால், விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, இக்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதென்பது மிகவும் துயரமான நிலைமையாகும். இதனால்தான் இலங்கையின் சகல பிரஜைகளும் பேதங்களை மறந்து ஒன்று பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

நாம் கடந்துவந்த பாதையை மறக்கலாகாது. நாம் அந்த காலத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டுமா? நாம் பூகோள மயமான உலகில் வாழ்கின்றோம். நாம் மற்றையவர்களில் தங்கியுள்ளோம். இந்த நாட்டில் சமாதானம் இருப்பதாக உணராவிடின் சுற்றுலா பயணிகள் இங்கு வரமாட்டார்கள். முதலீட்டாளர்கள் இங்கு வருவார்களா? எனவே இவ்வாறான சம்பவங்கள் நடப்பதை நாம் விரும்பமாட்டோம். எமது நாட்டுக்கு இப்படியான சம்பவங்கள் அபகீர்த்தியை ஏற்படுத்தும்.

இதற்கு நல்லதொரு தனிப்பட்ட உதாரணத்தை கூறுகின்றேன். இந்த வன்முறை நடந்த போது, அந்த பிரதேசத்தில் – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், தனிப்பட்ட ரீதியில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தார். வழமையாக பாதுகாப்பு அச்சுறுத்தலுள்ள நாடுகளுக்கு இராஜதந்திரிகள் செல்கின்றபோது மெய்ப்பாதுகாவலர்களும் செல்வர். ஆனால், இலங்கை அமைதியான நாடு என கருதப்பட்டதால் அவர் தனது பாதுகாப்பு பணியாளர்களுடன் வரவில்லை. இப்படியான நம்பிக்கையைத்தான் நாம் உருவாக்கியிருந்தோம்.

ஆனால், சம்பவத்தை அறிந்த சிங்கப்பூர் அரசாங்கம், அமைச்சருக்கான பாதுகாப்பு ஊழியர்களை அனுப்ப முன்வந்தபோதும், வெளிவிவகார அமைச்சர் தடுத்துவிட்டார். இங்கு தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என அவர் கூறியுள்ளார். இதனை வெளிநாட்டமைச்சர் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்தார். ஆனாலும், எமது நாடு பற்றிய நல்ல அபிப்பிராயத்தை இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் கெடுத்துவிடுகின்றன. அதற்காகத்தான் நான் வருத்தப்படுகிறேன். நாங்கள் கட்டிக்காத்த மரியாதையை சிதைத்துவிடக் கூடாது என்பதற்காக கவலைப்படுகிறேன்.

கேள்வி: இந்த வன்முறை நடந்ததையிட்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? சென்ற தடவை நான் உங்களை பேட்டி கண்டபோது நாம் பொதுபல சேனா பற்றியும் ஒரு சமூகத்தை இங்குவைத்து தாக்கும் காழ்ப்புணர்வுப் பேச்சுக்களைப் பற்றியும் பேசினோம். இது நடந்ததையிட்டு நீங்கள் எவ்வாறு ஆச்சரியப்பட்டீர்கள்?

பதில்: ஆம், நான் ஆச்சரியப்பட்டேன். மக்கள் தான் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். பிரச்சினைகளை தீர்க்க நாம் வன்முறையை நாடக்கூடாது. இதுவே, பயங்கரவாதமாக இருந்திருப்பின் இராணுவ அணுகுமுறையில் தீர்வினைக் கண்டிருக்கலாம். ஆனால், இவ்வாறான சமூக பிரச்சினைகளில் நாம் பேசவேண்டும், கலந்துரையாட வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கும் வழி வித்தியாசமானது.

நாம் ஓர் இருண்ட காலத்தை கடந்து வந்தவேளையில் இது நடந்தது ஆச்சரியமாக உள்ளது. நாம் ஏன் இருண்ட யுகத்தை இவ்வாறு குறுகிய காலத்தில் மறந்து போனோம்?

ஒரு சமூகத்தையோ அல்லது குழுவையோ குறை கூற முடியாது. மற்றவர்களை குற்றம் சாட்டுவதனால் பிரச்சினை தீராது. ஒரு தனிநபரோ, தனி அமைப்போ இந்த சம்பவங்களுக்கு பொறுப்பல்ல. இதற்கு காரணமாக பல தரப்பினர்கள் உள்ளனர். இதனால் தான் நான் ஆச்சரியமடைகிறேன். இப்படியான சந்தர்ப்பத்தில்தான் யாவரும் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும்.

கேள்வி: பலரும் குற்றம்சாட்டுவதுபோல், இன வன்முறைகளைத் தூண்டுகின்ற அமைப்புகளுடன் உங்களுக்கு இருக்கின்ற தொடர்பு என்ன?

பதில்: இதுவொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இந்த நாட்டின் அமைதியையும் ஸ்திரத் தன்மையையும் சீரழிக்க நினைக்கும் சிலரால் மேற்கொள்ளப்படுகின்ற வீண் பிரசாரமே இது. இந்த நாட்டின் அமைதி நிலவவேண்டும் என்பதற்காக இரவு – பகலாக பாடுபட்ட என்னைப் பார்த்து இப்படி கூறுபவர்கள் மடையர்கள்.

பயங்கரவாத்தினை அடியோடு அழித்த பின்னர் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் நிம்மதியாக உறங்குகிறார்கள். ஆனால் என்னால் அப்படி உறங்க முடியாது. பாதுகாப்பு துறையினர் ஒருபோதும் உறங்குவதில்லை. இராப்பகலாக உழைக்கின்றோம்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கையினை நாம் முன்னெடுத்தோம். ஆனாலும் நாட்டின் நிம்மதியை குலைக்க பல சக்திகள் பலமுறை முயற்சிகளை மேற்கொண்டன. அவர்களால் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை. இதனை கட்டிக்காக்க நாம் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும், பொறுப்பற்ற முறையில் சில அரசியல்வாதிகள் எமது புலனாய்வாளர்கள் பற்றி பறைசாற்றி வருகிறார்கள். எமது புலனாய்வு பலத்தினால்தான் பல புலிகளின் தலைவர்களின் நடமாட்டங்களை முறியடிக்க முடிந்தது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இப்படியான குரூர மனப்பான்மையுடையவர்கள்தான் எதிர்காலத்தில் நாட்டை ஆட்சிசெய்ய நினைக்கிறார்கள். இப்படியானவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பாதுகாப்பு என்னாகும் என்பது கேள்விக்குறியே.
கொத்தலாவன பாதுகாப்பு கல்லூரியின் நான் ஆற்றிய உரையை தவறாக சிலர் பிரசாரபடுத்தி வருகிறார்கள். இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றி கூறியிருந்தேன். அதில் இஸ்லாம் தீவிரவாதிகளும் ஒன்று என்பதை சுட்டிக் காட்டியிருந்தேன். நான் சாத்தியக் கூறுகளைப் பற்றி பேசியதை சரியாக புரிந்துகொள்ள முடியாதவர்கள், மதவாதம் பேசியதாக திரிவுபடுத்திவிட்டார்கள்.

இவர்கள் கூறுவதுபோல் தீவிரவாதத்தினை அடக்குவதற்கு இன்னொரு அமைப்பினை உருவாக்க வேண்டிய தேவை எனக்கில்லை. தகுந்த ஆதாரங்கள் இருக்குமானால் நேரடியாகவே அதனை அழித்தொழிக்க என்னால் முடியும்.
இன மற்றும் மத்தினை அடிப்படையாகக் கொண்ட பல அமைப்புகள் இருக்கின்றன. பொதுபல சேனா மட்டுமா அதில் உள்ளடக்கப்படுகிறது? இல்லை, முஸ்லிம் மற்றும் வேறு பல அமைப்புகளும் இருக்கின்றன. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் இவ்வாறான அமைப்புகளை உருவாக்குவதற்கு அவர்களுக்கு அடிப்படை உரிமை இருக்கிறது. சர்வதேசத்தினை சமாதானப் படுத்துவதற்காக என்னையும் அரசாங்கத்தையும் இழிவுபடுத்தும் நோக்கிலேயே சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளால் கட்டவிழ்க்கப்பட்ட போலிக் கதைகள்தான், என்னையும் பொதுபல சேனாவையும் ஒன்றிணைப்பதாகும். அவர்களுக்காக நான் எதனையும் தயார் செய்யவும் இல்லை வழங்கவும் இல்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

கேள்வி: முன்னர் தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. மேலும் மிகவும் முக்கியமாக, குரோதத்தை தூண்டும் தொடர்ச்சியான பேச்சுக்கள் நடந்துள்ளன. அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

பதில்: இது முஸ்லிம்களை மட்டும் பற்றியதல்ல.

கேள்வி: இது சிறுபான்மையினர் பற்றியது?

பதில்: அப்படியாயின் சமூக ஊடகங்களை பாருங்கள். நான் பொதுபல சேனாவை பாதுகாக்கவரவில்லை. ஆனால், நான் பொலிஸை பாதுகாக்கின்றேன். குரோத பேச்சுக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுக்கமுடியும்?

கேள்வி: ஏன், பயங்கரவாத தடுப்புச்சட்டம் மிகவும் தெளிவாக உள்ளதே? இல்லையா?

பதில்: இல்லை, நான் இதுபற்றி பல சட்டவுரைஞர்களுடன் பேசியுள்ளேன். காழ்ப்புணர்வு பேச்சு என்பதை வரையறை செய்வது மிகவும் கஷ்டமானது. அப்படியானதொரு வரையறை இருந்திருப்பின் எப்போதோ பேராயர் ராயப்பு ஜோசப்புக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்திருப்பேன். சட்டநடவடிக்கை எடுக்கும் போது அது நிலைமையை மிகவும் மோசமாக்கிவிட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும் என்பதனை நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.
சட்டநடவடிக்கை எடு என்று கூறுவது சுலபம். ஆனால் பொலிஸாருக்கு உள்ள கஷ்டங்களை கவனிக்கவேண்டும். பொதுபல சேனா, சிஹல ராவய, ராயப்பு ஜோசப், அசாத் சாலி ஆகியோரை விட்டுவிடுவோம். மாணவர்கள் தொடர்பான சம்பவங்களை பாருங்கள். இன்று தினமும் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. அவற்றை தடுப்பதில் பொலிஸாருக்கு உள்ள கஷ்டங்களை பாருங்கள். பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருப்பினும் இவை சட்டபூர்வமானவை. பொலிஸ் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? ரத்துபஸ்பவ சம்பவத்தை பாருங்கள். அங்கு மூன்று மரணங்கள் ஏற்பட்டன. பொது மக்களை பாதுக்காகச் சென்ற இராணுவ வீரர்கள் கம்பிகளின் பின்னால் உள்ளனர்.

கேள்வி: அப்படியாயின் கட்டமைப்பில் பிழையிருக்கிறதல்லவா?

பதில் : இல்லை. அப்படிக் கூறமுடியாது. இது உலகளாவிய ரீதியில் நடக்கின்ற ஒன்றுதான். பிரிட்டனில் கலகக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் தடியடிப்பிரயோகம் மற்றும் நாய்களைக் கொண்டும் அடக்குகிறார்கள். இதேபோல் அமெரிக்காவிலும் நடக்கிறது. சொல்வது சுலபம். ஆனாலும் பொலிஸாருக்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. அதனை அவர்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டும். சட்டத்தை கையிலெடுப்பவர்கள் மீது அவதானமாகத்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

கேள்வி: பதற்றம் ஏற்படும் என தெரிந்தும் கூட்டங்களை நடத்துவதற்கு பொலிஸார் அனுமதி கொடுத்ததும் பதற்றத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்காததும் ஏன்?

பதில் : உண்மைதான். இந்த முடிவெடுக்கும் விடயத்தில் சில தவறு நடைபெற்றிருக்கிறமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை பொலிஸாரிடம் நான் கேட்டபோது அவர்கள் வேறுவிதமாக சொன்னார்கள். இவர்கள் ஓர் இடத்தில் பேரணி ஆரம்பித்தால் அவர்களும் அதே இடத்தில் எதற்காக ஆரம்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பொசொன் போயா தினத்தில் மதகுரு ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: மதகுரு தாக்கப்பட்டது உண்மையா?

பதில் : ஆம், உண்மைதான்.

கேள்வி: ஆனால் மருத்துவ அறிக்கை அப்படி கூறவில்லையே?

பதில் : உளக்காயமும் உடல் காயமும் ஒன்றல்ல. மருத்துவ அறிக்கை உடல் காயத்தை மட்டுமே வெளிக்காட்டும்.

கேள்வி: ஆனால், ஓர் அமைச்சரவை அமைச்சரும், உங்கள் வகுப்பு கூட்டாளியுமான டாக்டர் ராஜித்த சேனாரத்னவும் களத்தில் காணப்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான பாலித்த தெவரபெருமவும், இது திட்டமிடப்பட்ட தாக்குதலென தெளிவாக கூறியுள்ளனர். அங்கு தடிக்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளுடன் ஆட்கள் நின்றனர் எனவும் கூறியுள்ளனர். பாதுகாப்பு அவ்வளவு கடுமையாக இருந்திருக்கின்ற நிலையில் இவை எப்படி நடந்திருக்கும்?

பதில்: அப்படியாயின் நீங்கள் இரண்டு தரப்பினரையும் குற்றம் காணவேண்டும். இரண்டு பக்கமும் இது திட்டமிட்டதென நீங்கள் நினைக்கின்றீர்களா? இவை பள்ளிவாசல்களும் கோவில்களுக்கும் அண்மையில் காணப்பட்டன. அப்படியாயின் இப்பகுதி மக்கள் இதை முன்னதாக அறிந்திருக்கவேண்டும்.
அரசாங்க அமைச்சராயினும் எதிர்க்கட்சி அரசியல்வாதியாயினும் எமக்கு இதை அறிவித்திருக்கவேண்டும். அவர்கள் கூறியது பிழை. ஓர் அமைச்சர், உண்மையை அறியாது இப்படி சொல்லக்கூடாது. இது மலிவான அரசியல். ஒரு தடியை இன்று பெற்றுக்கொள்ள முடியாதா? ஐந்து நிமிடத்திற்குள் ஒரு தடியை கொண்டுவரமுடியாதா? இரு தரப்பினருமே தடிகளுடன் ஆயத்தமாக இருந்தனர் என்று அவர்கள் கூறியுள்ளனரா?

கேள்வி: என்னுடைய கேள்வி என்னவெனில், பொலிஸார் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே?

பதில் : அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அவர்கள் மக்களுடன்தான் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு குழுவினர்மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? அனைத்து சம்பவங்களிலுமே கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மக்களுடன் மக்களாகவே இருந்திருக்கின்றனர். இதனால் அவர்களை உடனடியாக கட்டுப்படுத்துவதென்பது சாத்தியமற்ற காரியமே. இருந்தபோதிலும் பல போராட்டத்தின் மத்தியில் அதனை கட்டுப்பாட்டுக்குள் பொலிஸார் கொண்டுவந்திருக்கின்றனர்.

கேள்வி: கோட்டாபய ராஜபக்ஷவின் இராணுவ மனோபாவமானது ஜனாதிபதியின் அரசியல் திட்டத்தை அடித்துச்செல்கின்றது எனும் நம்பிக்கையுள்ளது. இதேகருத்தில் பல கட்டுரைகள் வந்தவண்ணமுள்ளன. உங்கள் இராணுவ மனோபாவமானது ஜனாதிபதியின் அரசியல் திட்டத்தை அடித்துச்செல்கின்றதா?

பதில்: எனக்கு பொதுபலசேனாவுடன் எவ்வித தொடர்பும் இல்லை. சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் எம்மீது பிழையாக குற்றம் சுமத்தியுள்ளனர். இதையே ஊடகங்களும் செய்துவருகின்றன. இதனால் சர்வதேச ஊடகங்களும் இதை உண்மையென நம்புகின்றன. இப்படி எழுதுபவர்களுக்கும் பைத்தியம் பிடித்துள்ளது. ஜனாதிபதி ஏன் நாட்டின் உறுதிப்பாட்டை கெடுக்கவிரும்பவேண்டும்? அவர் ஏன் தனது வாக்கு வங்கியை இழக்க விரும்பவேண்டும்? நாட்டின் தலைவர் நாட்டில் பிரச்சினையை உருவாக்க ஏன் விரும்பவேண்டும்? அவர்கள் ஆதாரமின்றி எழுதுகின்றனர். நான் இந்த நாட்டுக்கு ஏதும் நல்லது செய்யமுடியாதவர்களை இட்டு கவலைப்படுவதில்லை.

இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை என குற்றஞ்சாட்டுபவர்களும் இவர்கள் தான். இவர்களால் இப்படி எழுத முடிவது, இங்கு பத்திரிகை சுதந்திரம் இருப்பதற்கான ஆதாரமாகும். ஆனால், அவர்கள் இந்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர். இவர்கள் இதை நிரூபிப்பார்களாயின் நான் இந்த பதவியை விட்டு விலகிவிடுவேன். இந்த அமைப்புகளுடன் எனக்கு ஏதாவது தொடர்பு இருப்பதை நிரூபிப்பார்களாயின் நான் இப்பதவியை இராஜினாமா செய்வேன். நான் ஒரு பௌத்தன் என்று கூறுவதற்கு நான் பயப்படவில்லை. ஆனால், வன்முறையை நான் ஆதரிப்பதில்லை. சிங்களவர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன என கூற நான் பயப்படவில்லை. தமிழர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. சிங்கள கத்தோலிக்கர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. மன்னாரில் சிங்களவர்கள் இல்லை. ஆனால் முஸ்லிம்களுக்கும் தமிழ் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் உள்ளன. மட்டக்களப்பில் என்ன நடக்கிறது? அங்கும் தமிழர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. வத்தளை, ஜா-எல போன்ற பிரதேசங்களிலுள்ள கத்தோலிக்கர்களுக்கும் பிரச்சினை இருப்பதாக எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் தான் முஸ்லிம்களுடன் நான் பேசவேண்டும் என்று நம்புகின்றேன். நாடளாவிய ரீதியில் அந்த பேச்சுக்களை நான் நடத்தி வருகின்றேன். மிதவாத முஸ்லிம்கள், தமக்கு தீவிரவாத முஸ்லிம் சமுதாயத்தினருடன் பிரச்சினைகள் உள்ளதென என்னிடம் கூறியுள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களையும் எனக்கு தந்திருக்கின்றனர். அதற்காக அவர்களை இந்நாட்டிலுள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் என கூறவில்ரை. மாற்றுக்கொள்கையுடைய குறித்த நபர்கள் பற்றி ஆழமாக புலனாய்வு செய்து வருகின்றோம் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் முஸ்லிம் பயங்கரவாதிகள் உள்ளனர் என நான் கூறவில்ரை. இந்திய உளவு நிறுவனங்கள், இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலர் இலங்கையை தளமாக பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என என்னிடம் கூறினர். ஆனால் இதில் உண்மையில்லையென எமது புலனாய்வுகள் தெரிவித்தன. ஆனால் அரச படைகள் மற்றும் அரசாங்கத்தை தாண்டிபோகும் சில விடயங்களும் உள்ளன. சமய தலைவர்கள் இவை பற்றி சேர்ந்து பேசி செயற்படவேண்டும். ஏனைய சமுதாயத்தின் உணர்வுகள் பாதிக்கப்படகூடாது என்பதை அவர்கள் உறுதி செய்துகொள்ளவேண்டும். நான் இந்தவகையிலேயே வேலை செய்துவருகின்றேன்.

கேள்வி: இறுதியாக நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

பதில்: (சிரிப்பு) ஜனாதிபதி அழைப்பாராயின் நான் கட்டாயமாக வருவேன். அப்படி அரசியலுக்கு வருவதாக இருந்தால், இப்போது பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகளை விடவும் நான் நன்றாகசெயற்படுவேன் என நான் உறுதியளிக்கின்றேன்.

Related Posts