பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தரப்பு பிாிந்து நின்று இம்முறை தோ்தலில் போட்டியிடுமாக இருந்தால் சில ஆசனங்களை இழக்கும் நிலையே ஏற்படும் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்திய தூதுவருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடா்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”தமிழர் தரப்பில் உள்ளவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையில் ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் புதிய அரசாங்கத்தோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும்.

அந்த வகையிலே நீங்கள் ஒற்றுமையோடு இருந்தால் தான் எல்லா விடயங்களையும் சாதிக்க முடியும். அதேபோல் இந்த அபிவிருத்தி பணிகளை நாங்கள் கூடுதலாக வடக்கிலே செய்ய இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் தமிழர் தரப்பு கூடுதலான ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் அபிவிருத்தி பணிகளை மக்களிடம் சென்றடைய கூடிய வாய்ப்பு உள்ளது.

அது மாத்திரம் அல்ல தமிழ் தரப்பு ஓரணியிலே ஒன்றாக வேண்டும். தற்போது உள்ள அந்த பிரிந்து நிற்கும் செயற்பாட்டை தொடர்ந்து வைத்திருப்பது நல்லதல்ல. நல்லதொரு ஒற்றுமையான முடிவை எட்டி இந்த தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற வேண்டும்.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியும் ஒன்றாக சேர வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றது. இந்நிலையில் நான் ஒரு ஆலோசனையை முன் வைப்பதற்கு விரும்புகின்றேன்.

இப்போதுள்ள கள நிலவரம் எங்களுடைய பிரதிநிதித்துவம் குறைகின்ற செயற்பாடாகத்தான் காணப்படுகிறது. அண்மையில் நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை காணக் கூடியதாகவும் உள்ளது.

ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தமிழரசுக் கட்சியிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஒரு பொதுச் சின்னத்திலே குறிப்பாக குத்துவிளக்கு சின்னத்திலும்கூட வலியுறுத்தாமல் எல்லோரும் இணைந்து ஒரு பொது சின்னத்திலே இந்த தேர்தலில் பங்குபற்றினால் அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவாக இருக்கும்.

அந்த வகையில் எங்களைப் பொறுத்தமட்டில் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம்.

குறிப்பாக அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களிலே நாங்கள் பிரிந்து நின்றால் இருக்கின்ற பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விடும். அங்கு மட்டுமல்ல வன்னியிலும் எமக்கு பெரிய ஆபத்து உள்ளது.

நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும். மக்களின் கோபத்துக்கு உள்ளாக்கப்பட்டு நமக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் ஒன்று, இரண்டாக மாறுகின்ற நிலைமை ஏற்படும்.

ஆகவே வன்னியை பொறுத்தவரையும் அது ஒரு அபாயகரமான நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. சிங்கள பிரதிநிதித்துவம் கூடி விடுமா என்கின்ற ஒரு அச்சம் காணப்படுகிறது.

அது மாத்திரமல்ல எங்களுக்குள் பிரச்சனைகளை நாங்கள் வைத்திருப்போமாக இருந்தால் முஸ்லிம் சகோதரர்களுக்கும் பிரதிநிதித்துவத்தில் கூடுதலாக வருகின்ற நிலைமை காணப்படும்” என செல்வம் அடைக்கலநாதன் மேலும் தொிவித்தாா்.

Related Posts