பொங்கு தமிழ் பிரகடனத்தின் 18ஆம் ஆண்டு நிறைவு!

யாழ். பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 18ஆம் ஆண்டு நிறைவு தின நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்குதமிழ் நினைவு தூபிக்கு முன்னால் இடம்பெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

இலங்கை அரசின் முப்படைகளினால் யாழ். பல்கலைக்கழகம் முழுமையாக முற்றுகையிட்டிருந்த நிலையிலும் யாழ். பல்கலை சமூகத்தினால் கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளில் பொங்கு தமிழ் என்னும் தொனிப்பொருளில் மாபெரும் எழுச்சி நிகழ்வு நடத்தப்பட்டது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தை தமிழர் தேசத்தின்பால் திரும்பிப் பார்க்கவைக்கும் வகையில் பொங்குதமிழ் நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை தூபியாகப் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts